கிரான் கருங்காலிச்சேனையில் காட்டு யானையின் தாக்குதலில் மீன் விற்க சென்றவர் பலி


(ரூத் ருத்ரா)
மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கருங்காலிச்சேனையில் காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஜங்கரன் வீதி கிண்ணையடியைச் சேர்ந்த பொ.ஆனந்தன் வயது (49) என்ற 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார் 

நேற்று (3) அதிகாலை வாழைச்சேனை பகுதியில் இருந்து   மீன்களை கிரான் பிரதேசத்தில் விற்பனை செய்யும் முகமாக எடுத்துச்  சென்ற வேளை வீதியின் குறுக்கே நின்ற யானையானது துரத்தி தாக்கியதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

 இவரது சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

 கருங்காலிச்சேனை கிராமத்தில் யானைகளின் நடமாட்டம் மற்றும் அவற்றின் தொல்லை காரணமாக  மக்கள் வாழ்வதற்கு அச்சம் தெரிவித்து இடம்பெயர்ந்து வாழ்கின்றனர்.

மாலை வேளைகளில் கிராமத்திற்குள் உட்புகும் காட்டு யானைகளனாது பயன் தரும் மரங்கள்,சிறுதோட்டப் பயிர்கள் மற்றும் வேலிகள் என்பனவற்றை உடைத்து சேதப்படுத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. தற்போது பனம் பழத்திற்குரிய காலமாதலால் அவற்றினை உணவாக உட்கொள்ள யானைகள் ஊருக்குள் வருகின்றன.

 பின்னர் அருகிலுள்ள ஆற்றைக் கடந்து பகல் வேளைகளில் மறைவான இடத்தில் ஒழிந்து கொண்டு மீண்டும் மாலை வேளைகளில் ஊருக்குள் வந்து அட்டகாசத்தில் ஈடுபடுகின்றது.

இதனால் மக்கள் அச்சத்தில் வாழ்கின்றனர்.  எனவே யானையின் நடமாட்டத்தினை கட்டுப்படுத்தி தருமாறு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளை கேட்கின்றனர்.