(ரவிப்ரியா)
பெரியகல்லாறு அருள்மிகு கடல்நாச்சி அம்மன் ஆலயத்தின் கும்பாபிஷேக நிகழ்வு கடந்தமாதம் 26ந்திகதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 12 நாட்கள் மண்டலாபிஷேகம் சிறப்பாக நடைபெற்று இறுதிநாளான இம்மாதம் 09ந் திகதி பக்திபூர்வமாக பக்தர்கள் ஆலய வளாகம் முழுக்க நிறைந்திருக்க யாகம்., சங்காபிஷேகம் கொடியிறக்கம் திருக்கதவடைப்பு. அன்னதானம் என்பன வெகு சிறப்பாக காலை 7.00மணிமுதல் மாலை 5மணிவரை தொடர்ச்சியாக நடைபெற்றது.
பக்தர்கள் பண்பாட்டு ஆடைகளுடன் அம்மன் அருள் வேண்டி நீண்ட நேரம் அமைதியாக பசியும் மறந்து அமர்ந்திருந்த பக்குவமும் தங்களை வெகுவாக கவர்ந்ததாக சங்காபிஷேகம் நடாத்திய வடக்கைச் சேர்ந்த குருமாரில் ஒருவர் தனது உரையின் போது குறிப்பிட்டது இந்த மண்ணுக்கு அம்மன் அருளால் கிடைத்த கௌரவமாகும்.
குருமாரால் யாகம் முறைப்படி வளர்க்கப்பட்டு, முல ஸ்தானத்தில் 500ஆண்டுகளுக்கு மேலாக நிலை கொண்டுள்ள தொன்மை நிறை அம்மனுக்கும் அழகிய புதிய மணிமண்டபத்தில் எழுந்தருளியிருக்கும் அம்மனுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 1008 சங்குகளால் சங்காபிஷேகமும் நடைபெற்றது.
வுங்கக் கடல் ஓசையை மிஞ்சும் வகையில் பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணதிர ஒலிக்க, யாகப் புகை விண்ணில் மேகக் கூட்டமாக பரவ, தீப ஆராதனைகள் அடிக்கடி மின்னலாக ஜொலிக்க, அம்பாளின் மூலஸ்தான தரிசனமும், மணிமண்டப தரிசனமும் பக்தர்களை பரவசப்படுத்த அனைவருமே அம்பாளுடன் ஐக்கியமாகி கொண்டிருந்தனர்.
இந் நிலையில் கொடி இறக்கும் பூசை நடைபெற்று குருவால் கொடி இறக்கப்பட்டு: ஆலய வண்ணக்கர் தலையில அதை வைக்க, அதை மூல ஸ்தானத்திற்கு சம்பிரதாயபூர்வமாக எடுத்துச் செல்ல அங்கிருந்த குரு அதை வாங்கி அம்பாளின் பாதடியில் சமர்ப்பித்தார்.
அதன்பின்னர் திருக்கதவு பூட்டும் நிகழ்வு வழமையான சம்பிரதாயப்படி நடைபெற்றது. அத்திருக்கதவானது வருடம் ஒருமுறை வைகாசி பூரணையையை அடுத்தவரும் திங்கள் தினத்தன்று மீண்டும் திறந்து வருடாந்த பூஜை நடைபெறும். மறுநாள் செவ்வாய்க்காடுதல் நடைபெற்று சடங்கு நிறைவு பெறும்.
இவ்வாண்டு மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முற்கூட்டியே திருக்கதவு திறக்கப்பட்டதால். இன்று மூடப்பட்ட திருக்கதவ எதிர்வரும் மாதம் 5ந்திகதி திங்களன்று மீண்டும் திறக்கப்பட்டு வருடாந்த திருச்சடங்கு நடைபெற இருக்கின்றது..