(ரவிப்ரியா)
கடந்த 24, 25ந் திகதிகளில் நடைபெற்ற எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வில் பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த ஐயாயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் எண்ணெய்காப்பு சாத்தி மறுநாள்(26) மஹா கும்பாபிஷேகம் அதைவிட பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் புடைசூழ பக்திபூர்வமாக நடைபெற்றது.
தற்போது மிகவும் சிறப்பான முறையில் தினமும்; மதியம் மண்டலாபிஷேகமும் (12தினங்கள)) ,இரவில் விசேட பூஜையும் நடைபெற்று வருகின்றது. அத்துடன் சிறந்த ஒழுங்கமைப்பில் தினமும் அன்னதான நிகழ்வும் இடம் பெற்று வருகின்றது.
பந்தலில் 500ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்த ஆலயம் இருமுறை கும்பாபிஷேகம் கண்டு இன்று பக்தர்களுக்கு வசதியான மாற்றங்களுடன் மணிமண்டபத்துடன் பவளம்போல் ஜொலிக்கிறது. புதுப் பொலிவுடன் பக்தர்களை வசீகரிக்கின்றது.
புயலிலும் சுனாமியிலும் போர் அனர்த்தங்களிலும் அழியாமல் அப்படியே இருக்கும் ஆலயம் என்பதால் அதன் சக்தி உணர்ந்து அறிந்து கூடும் பக்தர்களுக்கு குறைவேவயில்லாத நிலையே நீடிக்கிறது.
கிழக்கில் கல்லடியில் மட்டும் ஒரு ஆலயம் பெயரளவில் இருந்தபோதும். பேசுகின்ற பெயர் பெற்ற ஆலயமாக கல்லாறு கடல்நாச்சி அம்மன் ஆலயமே அகிலமெங்கும் விலாசம் பெற்று எல்லா இடங்களிலும் வியாபித்து அவள் அருளைச் சொரிந்து கொண்டிருக்கின்றாள்.
மண்டலாபிஷேகத்தின் போது முதற் தடவையாக மலையகத்தில் இருந்து வந்த இளம் பெண் ஒருவர் ஆலயத்தின பெண்கள் செல்ல கூடாத இடத்திற்கு (தெரியாதனமாக) அம்மனை தரிசிக்கும் ஆர்வத்தில் செல்ல முயன்ற போது தன் உடலில் அதிர்வு ஒன்று ஏற்பட்டதையும் மயக்கம் வருவது போல் இருந்ததாகவும் மெய்சிலிர்க்க கூறினார்.
இவ்வாறு பல மெய்யடியார்கள் தங்கள் அனுபவங்களை அவ்வப்போது தெரிவித்துக் கொண்டே இருக்கின்றார்கள். திருகோணமலையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் இவ்வாலயத்தை ஒருபோதும் தரிசிக்காதவர், ஒரு தடவை முதன் முறையாக தரிசிக்க வந்தபோது தான் கனவில் கண்ட அதே விக்கிரகம்தான் இது என்று அடையாளப்படுத்தி வியப்புடன் தெரிவித்தார். அற்புதம் அற்புதம் என ஆனந்தக் கண்ணீர் விட்டார்.
மெய்யடியார்களின் அபிமானத்திற்குரிய நிலையான விசுவாசத்திற்குரிவராக அருள் வழங்கிக் கொண்டிருக்கும் அம்மன் அருள் அனைவருக்கும் அமைவதாக.
எதிர்வரும் 9ந்திகதி செவ்வாய்க் கிழமை ஆலயவண்ணக்கர் நே.கமல்ராஜ் தலைமையில் அடப்பன்மார் சகிதம் சங்கானை பிரம்மஸ்ரீ நித்தியசிவானந்தக் குருக்களால் அபம்பாளுக்கு நவோத்திர சகஷ்ர சங்காபிஷேகம் (1008) செய்து வைக்கப்படும்.