தற்பொழுது காணப்படும் மின்சாரக் கட்டணத்தை 33% குறைக்க முடியும்!!


மின்சாரசபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு போன்ற தரப்பினர் முன்வைத்த புள்ளிவிபரத் தகவல்கள் மற்றும் மின்சாரக் கட்டணத்தில் தாக்கம் செலுத்தும் ஏனைய சகல விடயங்களையும் விரிவாக மதிப்பாய்வு செய்து தற்பொழுது காணப்படும் மின்சாரக் கட்டணத்தை 33% குறைக்க முடியும் என நிபுணர்கள் கூறும் கருத்துக்களை கவனத்தில் கொண்டு மின்சார சபைக்கு நஷ்டம் ஏற்படாத வகையில் 2024 ஆம் ஆண்டில் மின்சாரக் கட்டணத்தை ஆகக் குறைந்தது 20% இனால் குறைக்க வேண்டும் என பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்குப் பரிந்துரைத்துள்ளது.

இதற்கமைய மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்குத் தேவையான பரிந்துரைகளை இம்மாத இறுதிக்குள் சமர்ப்பிக்க முடியும் எனப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர்.

பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ காமினி வலேபொட தலைமையில் அண்மையில் (22) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

இந்தக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடல்களை நடத்துவதற்காகக் கைத்தொழில் அமைச்சு, நிதி அமைச்சு, இலங்கை மத்திய வங்கி, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, கைத்தொழில் அபிவிருத்திச் சபை, தொழில்முயற்சி அபிவிருத்தி அதிகாரசபை, சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் போன்ற அரசாங்க நிறுவனங்களின் அதிகாரிகள், சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் சபை மற்றும், சிறிய, நடுத்தர தொழில்முயற்சியாளர்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் அழைக்கப்பட்டிருந்தனர்.

நேரடியாகப் பொருளாதாரப் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும், சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்களைக் கண்டறிந்து அவற்றுக்கு மீண்டும் புத்துயிர் அளிப்பதன் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துவது, அந்நியச் செலாவணியை அதிகரிப்பது போன்ற இலக்குகளை அடைவதற்கான பரிந்துரைகளையும் குழு முன்வைத்திருந்தது.

இதற்கமைய, மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டமையால் நாடு முழுவதும் இதுவரையில் 10 இலட்சத்துக்கும் அதிகமான மின்சார இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டிருப்பதாகக் சுட்டிக்காட்டிய குழு, இதனால் கைத்தொழில்கள் மற்றும் சமூகத்துக்கு ஏற்பட்டுள்ள இழப்பை சீர்செய்யும் நோக்கில் நிலுவையில் உள்ள மின்சாரக் கட்டணத்தில் 50% ஐ மாத்திரம் முதலில் வசூலித்து மின்சார இணைப்பை வழங்கி, எஞ்சிய தொகையை தவணை அடிப்படையில் வசூலிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குழு அறிவுறுத்தல் வழங்கியது.

அத்துடன், நிலையான மின்சார இணைப்பை வழங்கும்போது அறவிடப்படும் அதிகூடிய கட்டணம் காரணமாக சிறிய மற்றும் நடத்தர கைத்தொழில்களை ஆரம்பிக்க எதிர்பார்க்கும் புதிய தொழில்முயற்சியாளர்கள் அதைரியப்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கு இணைப்புக் கட்டணத்தை தவணை அடிப்படையில் செலுத்துவதற்கு வாடிக்கையாளர்களுக்கு இடமளிக்கப்பட வேண்டும் என்றும், புதிய இணைப்புக்கான கட்டணம் மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டு முடிந்தளவு குறைக்கப்பட வேண்டும் என்றும் குழு பரிந்துரைத்தது.

எரிசக்தித் துறையின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அணுகுமுறையாக அரசாங்கத் துறையின் மின்சாரப் பாவனை தொடர்பில் கணக்காய்வொன்றை மேற்கொள்ளுமாறும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு, துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் அறிவுறுத்தல் வழங்கினார்.

தொழிற்சாலைகளுக்கு மின்சக்தியை வழங்குவதற்கு சூரிய சக்தியைப் பயன்படுத்த சூரியப்படலங்களை ஊக்குவிக்கும் நோக்கில் அவற்றைக் கொள்வனவு செய்வதற்கு மானிய வட்டியின் அடிப்படையில் கடன்திட்டமொன்றை ஆரம்பிக்குமாறும் நிதி அமைச்சு மற்றும் மத்திய வங்கிக்கு குழு பரிந்துரைத்தது.

மேலும், மானிய வட்டி விகிதத்தின் கீழ் சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளை இலக்காகக் கொண்ட கடன் திட்டத்தை செயல்படுத்த குழுவின் முன்மொழிவின்படி அதிகபட்சமாக மறுநிதியளிப்பு வசதிகளை வழங்க நிதி அமைச்சு தனது உடன்பாட்டை வெளிப்படுத்தியது.

சிறிய மற்றும் நடுத்தரக கைத்தொழில்கள் சீராகச் செயற்படுவதற்குத் தேவையான மூலப்பொருட்களை வழங்குவதை உறுதி செய்வதற்காக, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய மூலப்பொருட்களை கண்டறிந்து, அந்த மூலப்பொருட்களுக்கு வரிச்சலுகைளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் குழு பரிந்துரைத்தது.

மேலும், தற்பொழுது மின்சார சபையினால் வெளியக விநியோகஸ்தர்கள் மற்றும் எனைய நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படும் உள்நாட்டு கைத்தொழில்கள் மூலப்பொருட்களாகப் பயன்படுத்தும் செப்பு, ஈயம், அலுமினியம் மற்றும் ஏனைய உலோகப் பொருட்களை கைத்தொழில் அமைச்சு மற்றம் கைத்தொழில் அபிவிருத்தி சபையினால் பரிந்துரைக்கப்படும் சிறிய மற்றும் நடுத்தரக் கைத்தொழில்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குழு பரிந்துரைத்தது.

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்களுக்கு சரியான வரையறை மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி சபை, மத்திய வங்கி போன்ற ஏனைய நிறுவனங்களால் வழங்கப்படும் வரையறை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வேறுபடுவதன் காரணமாக கொள்கை ரீதியான தீர்மானங்களை எடுக்கும்போது அது தாக்கத்தைச் செலுத்தும் விடயமாக மாறிவருவதாக இங்கு கலந்துரையாடப்பட்டது.

இதற்கு அமைய பொதுவான வரையறையின் அடிப்படையில் புள்ளியியல் தரவுகளை உடனடியாக வெளியிடுவதன் மூலம் கொள்கை வகுப்பாளர்களுக்கு தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தனது ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் குழு வலியுறுத்தியது.

மேலும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழில்கள் தமது இருப்பு நிலையைப் பலப்படுத்துவதற்குத் தேவையான கடன் வசதியைப் பெற்றுக் கொள்வதை இலகுபடுத்தும் வகையில் அவர்களின் கடன் விபரங்கள் தடுப்புப் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு கடன் தகவல் பிரிவு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழில்களைப் பதிவு செய்வதற்கான அனைத்து சட்டங்களையும் நடைமுறைகளையும் மறுஆய்வு செய்வதற்கும் உரிமம் பெறுவதற்கும் எளிமையான முறையை அறிமுகப்படுத்துவதற்கும் குழு பரிந்துரைத்தது.

இதற்கமைய குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு கைத்தொழில் அமைச்சின் தலைமையில் வழிநடத்தல் குழுவொன்றை நியமிக்குமாறும், இரண்டு வாரங்களுக்குள் முன்னேற்றத்தை குழுவுக்கு அறிக்கையிடுமாறும் அறிவுறுத்தப்பட்டது.