மட்டக்களப்பு புன்னைச்சோலையில் 17 லட்சம் ரூபாய், 4.5 பவுண் தங்கம் கொள்ளை !


மட்டக்களப்பு, புன்னைச்சோலை பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து நேற்றிரவு 17 இலட்சத்து 50ஆயிரம் ரூபாய் பணமும், நான்கரை பவுண் தங்கமும் கொள்ளையிடப்பட்டுள்ளன.

புன்னைச்சோலை பத்திரகாளியம்மன் ஆலயத்திற்கு அருகேயுள்ள வீடொன்றிலேயே இந்த துணிகரக்கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவ தினத்தன்று வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் வீட்டினைப் பூட்டி சாவியை வீட்டு வளாகத்தில் மறைத்து வைத்துவிட்டு புன்னைச்சோலை பத்திரகாளியம்மன் ஆலய திருச்சடங்கிற்குச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் வீட்டுக்குத் திரும்பிய வேளை வீட்டின் படுக்கையறையிலிருந்த அலுமாரி உடைக்கப்பட்டு அதிலிருந்த 17 இலட்சத்து 50ஆயிரம் ரூபாய் பணமும் நான்கரை பவுண் தங்கமும் கொள்ளையிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அங்கிருந்த CCTV கெமராவின் கார்ட் டிஸ்க்கும் களவாடிச்செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.