4 வயது சிறுமி தாக்கப்பட்ட காணொளியை சமூக ஊடகத்தில் பதிவிட்டவருக்கு 5 இலட்சம் ரூபா சன்மானம் !
4 வயது சிறுமி தாக்கப்படும் காணொளியை சமூக ஊடகங்களில் பதிவிட்டதாகக் கூறப்படும் இளைஞருக்குப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னக்கோன் தலைமையில் 5 இலட்சம் ரூபா சன்மானம் வழங்கப்பட்டது.

இந்த சன்மானம் வழங்கும் நிகழ்வு இன்று (12) புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.

அண்மையில் வெலிஓயா பிரதேசத்தில் 4 வயது சிறுமி தாக்கப்பட்ட காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சிறுமியைத் தாக்கியதாகக் கூறப்படும் குகுல் சமிந்த என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

தாக்குதலுக்குள்ளான சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் நன்னடத்தை பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.