மட்டக்களப்பு மேற்கு வலய முன்பள்ளி ஆசிரியர்களுக்கான வாண்மை விருத்திச் செயலமர்வுகள்

(சித்தா)

மட்டக்களப்பு மேற்கு வலய முன்பள்ளி ஆசிரியர்களுக்கு கற்பித்தல் முறைமை தொடர்பான வாண்மை விருத்திச் செயலமர்வுகள் பிரதேச மட்டத்தில் 3 நாள்கள் இடம்பெற்றன. 

இச்செயலமர்வினை மட்டக்களப்பு மேற்கு வலய முன்பிள்ளைப்பருவ பராமரிப்பும் அபிவிருத்திக்கும் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.சுப்பிரமணியம் கணேஸ் அவர்கள் ஒழுங்கமைத்து செயற்படுத்தினார். இவருடன் முதன்மை உளவளத்துணையாளரும் மகளிர், சிறுவர் விவகார அமைச்சின் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்திக்கான முதன்மைப் பயிற்றுநருமான திரு.முத்துராஜா புவிராஜா அவர்களும் வளவாளராகக் கலந்து கொண்டு செயற்பாடுகளை முன்னெடுத்தார். 

2024.05.30 அன்று பட்டிப்பளை பிரதேச முன்பள்ளி ஆசிரியர்களுக்கான செயலமர்வு அரசடித்தீவு விக்னேஸ்வரா முன்பள்ளி மண்டபத்திலும் 2024.05.31 அன்று ஏறாவூர் பற்று பிரதேச முன்பள்ளி ஆசிரியர்களுக்கான செயலமர்வு இலுப்படிச்சேனை அம்பாள் வித்தியாலய மண்டபத்திலும் 2024.06.03 அன்று வவுணதீவு பிரதேச முன்பள்ளி ஆசிரியர்களுக்கான செயலமர்வு குறிஞ்சாமுனை சக்தி வித்தியாலய மண்டபத்திலும் இடம்பெற்றது. 

நவீன தொழிநுட்பங்களைப் பயன்படுத்தி கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்ளும் வழிமுறைகள் தொடர்பாகவும் விளையாட்டினூடாக கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்ளும் உத்திகள் தொடர்பாகவும் செயல்முறை மூலமான பயிற்சிகள் அளிக்கப்பட்டன. 

மேலும் முன்பள்ளிக்குரிய ஆகக்குறைந்த தராதரங்களையும் தேவைகளையும் செவ்வை பார்க்கும் பட்டியல் தொடர்பான விளக்கங்களும் இதன்போது அளிக்கப்பட்டன. ஆசிரியர்கள் ஆர்வத்துடனும் மகிழ்ச்சியாகவும் செயலமர்வில் பங்குபற்றியிருந்தமை குறிப்பிட்டத்தக்கதாகும்.