கடமைக்கு சமுகமளிக்காதோருக்கு விசேட விடுமுறை : சுற்று நிருபம் வெளியீடு !


வெள்ளம், மண் சரிவு மற்றும் வீதிகள் பாதிப்பு காரணமாக கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் கடமைக்கு சமுகமளிக்காத அரசாங்க ஊழியர்களுக்கு, விசேட விடுமுறையை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த வகையில் கொழும்பு, களுத்துறை, கம்பஹா, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, புத்தளம், குருநாகல், பொலனறுவை, கேகாலை, மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் வெள்ளம் மண்சரிவு மற்றும் வீதிகள் பாதிப்படைந்ததன் காரணமாக கடமைக்கு சமுகமளிக்காத அரசாங்க ஊழியர்களுக்கே, இந்த விசேட விடுமுறையை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி சபை அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்னவின் கையொப்பத்துடன் அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்களுக்கு இந்த சுற்று நிருபம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமது வசிப்பிடத்திலிருந்து அலுவலகத்துக்கு பயணிக்கும் பொது போக்குவரத்து சேவை தடைப்பட்டிருத்தல் காரணமாக கடமைக்கு சமுகமளிக்காதவர்கள், வீதி பாதிப்பு அல்லது அனர்த்தங்களால் பாதிப்புகள் ஏற்பட்டு அல்லது இடம்பெயர்வு காரணமாக கடமைக்கு வராவதவர்கள் ஆகியோருக்கு இந்த விடுமுறையை வழங்குவதற்கு குறித்த சுற்றுநிருபம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க சம்பந்தப்பட்ட அதிகாரி தமக்கான விசேட விடுமுறையை பெற்றுக் கொள்ள முடியும்.