போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி ஒஸ்ரியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கையர் கைது !


போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி ஒஸ்ரியாவின் வியன்னா நகரத்துக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று (09) குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம், தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் ஆவார்.

சந்தேக நபர் நேற்று (09) இரவு இந்தியாவிற்குச் சென்று பின்னர் அங்கிருந்து ஒஸ்ரியாவின் வியன்னா நகரத்துக்கு தப்பிச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார்.

இதன்போது, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபரின் கடவுச்சீட்டு போலியானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தரகர் ஒருவரிடம் 90 இலட்சம் ரூபா பணத்தை கொடுத்து, இந்த போலி கடவுச்சீட்டை தயாரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.