2025 ஜனவரி 1 ஆம் திகதி முதல் அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கான பரிந்துரைகளை உள்ளடக்கிய நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை, குழுவின் தலைவர் உதய ஆர். செனவிரத்ன மற்றும் ஏனைய குழு உறுப்பினர்களினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.
இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு அமைவாகவும் தேவையான நிதி ஒதுக்கீடுகளை வழங்க வேண்டும் என்ற திறைசேரியின் இணக்கப்பாடு மற்றும் அமைச்சரவையின் அனுமதியுடன் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக குழுவின் தலைவர் உதய ஆர். சேனவிரத்ன தெரிவித்தார்.
அரச துறையின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை மறுசீரமைப்பதற்கான நிபுணர் குழு அரச மற்றும் தனியார் துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் 10 உறுப்பினர்களை உள்ளடக்கி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் 2024 ஜூன் 12 ஆம் திகதி அமைச்சரவை அனுமதியுடன் நியமிக்கப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி செயலாளர் உதய ஆர். செனவிரத்ன தலைமையில், தேசிய வரவு செலவுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜூட் நிலுக்ஷன், முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹிரன்ச கலுதந்திரி, ஒருங்கிணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம் எஸ். அலோக பண்டார, நிறுவன பணிப்பாளர் நாயகம் எச்.ஏ. சந்தன குமாரசிங்க, வைத்தியர் டெரன்ஸ் காமினி டி சில்வா, ஓய்வுபெற்ற சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நாயகமும் இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவருமான துமிந்த ஹுலங்கமுவ, BCS International Technology PTY LTD இன் பிரதம பொது அதிகாரி சந்தி எச். தர்மரத்ன, கொமர்ஷல் வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் (மனித வளங்கள்) இசுரு திலகவர்தன, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ஜீ.எல். வர்ணன் பெரேரா ஆகியோர் இந்த குழுவின் ஏனைய உறுப்பினர்களாக அங்கம் வகித்தனர்.
குழுவிற்கு 03 மாதங்களுக்குள் இறுதி அறிக்கை சமர்ப்பிக்ப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், 18 விடயப்பரப்புக்களின் கீழ் அரச சேவைக்குள் மேற்கொள்ளப்பட வேண்டிய சம்பள அதிகரிப்பு கொள்கைகள் தொடர்பில் பின்பற்ற வேண்டிய விடயங்கள் இந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
"கடந்த பொருளாதார வீழ்ச்சியை அடுத்து, அரசாங்கத்தின் வருவாயை அதிகரிக்க பல நடவடிக்கைகள் எடுக்க வேண்டியிருந்தது. அப்போது, அரச ஊழியர்கள் கடுமையான வாழ்க்கைச் சுமை பெரும் பிரச்னைகளை எதிர்கொண்டனர்.
எத்தகயை பிரச்சனைகள் இருந்தாலும் ஒவ்வொருவரும் தமது பணிகளைச் சரியாகச் செய்தனர். அதன் காரணமாக, 2023ஆம் ஆண்டு நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி உயர்வடைந்து, பொருளாதாரம் வலுப் பெற்றது.
2023 ஆம் ஆண்டு அரசாங்கத்திற்கு கிடைத்த பணத்தில், குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அஸ்வெசும நிவாரணத் திட்டத்தைக் கொண்டு வந்தோம். 2024 இல் பொருளாதார வளர்ச்சியுடன், அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தினோம்.
அதற்கான அறிக்கையை உதய ஆர். செனவிரத்ன மற்றும் ஏனைய உறுப்பினர்கள் எமக்கு வழங்கியுள்ளனர். அதனை செயற்படுத்தும் பொறுப்புகள் நிதி அமைச்சிடம் கையளிக்கப்படும்.
இதனால் குழு அறிக்கையின் பரிந்துரைகளுக்கு அமைய அனைவருக்கும் சம்பள அதிகரிப்பு வழங்க முடியுமென நம்பும் அதேநேரம், உதய ஆர். செனவிரத்ன குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவிகிறேன்." என்றார்.
நிபுணத்துவ குழுவின் தலைவர் உதய ஆர். செனவிரத்ன
“அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை மறுசீரமைப்பது தொடர்பிலான அறிக்கையை தயாரிப்பதற்கான குழு அமைச்சரவை அனுமதியுடன் 2024 ஜூன் 12 ஆம் திகதி அரச துறை மற்றும் தனியார் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 10 உறுப்பினர்களைக் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.
இது தொடர்பான அறிக்கையை 03 மாதங்களுக்குள் வழங்குமாறு எமக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.அதன்படி இடைக்கால அறிக்கை ஓகஸ்ட் 12 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டது. 18 விடயங்களின் கீழ் அரச சேவையில் மேற்கொள்ளப்படவுள்ள சீர்திருத்தங்கள் மற்றும் சம்பள அதிகரிப்பு தொடர்பில் பின்பற்ற வேண்டிய கொள்கையை முன்மொழிந்திருக்கிறோம்.
இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் ஓகஸ்ட் 12ஆம் திகதி கிடைத்திருந்தது. அதன்படி அனைத்து நியதிச் சட்ட நிறுவனங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்கள், பல்கலைக்கழகங்கள், இராஜதந்திர சேவை நிறுவனங்கள் உள்ளடங்களாக அனைத்து அரச துறையினருக்கும் சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுப்பதற்கான அறிக்கையை நாங்கள் தயாரித்திருக்கிறோம்.
குறிப்பாக, அடிப்படை சம்பளம் 24% லிருந்து 50%-60% ஆக உயர்கிறது. இது அடிப்படிச் சம்பளம் 30,000 ரூபாயாக இதன்போது கருத்தில் கொள்ளப்பட்டிருப்பதுடன் இந்த அடிப்படை சம்பளம் 1 முதல் 6 விகிதத்தினானல் திருத்தம் செய்யப்படவுள்ளது.
இதன்படி, ஏறக்குறைய 1,1/2 மில்லியன் அரசாங்க ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு கிடைக்கும் என்பதோடு ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவை 50% சதவீதமாக்குவதற்கும் பரிந்துரைக்கப்பட்டது.
03 மாத காலம் முடிவடைவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் குழுவின் இறுதி அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்தோம். அதன்படி அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பெரும் நிவாரணம் கிடைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான நிதி ஏற்பாடுகளுக்கு திறைசேரியின் இணக்கப்பாடுகளை பெற்றுக்கொண்டதன் பின்பே இந்த பரிந்துரைகளை செய்திருக்கிறோம். அதேபோல் இந்த பரிந்துரைகள் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்திற்கு அமைவானதாக உள்ளமையும் சிறப்பம்சமாகும்.
எனவே திறைசேரியின் அனுமதி மற்றும் அமைச்சரவையின் அனுமதியுடன் இதனை 2025 ஜனவரி 01 முதல் அமுல்படுத்த முடியும். அது குறித்து சந்தேகம் கொள்ள அவசியமில்லை.
அதேபோல் அரச சேவைக்குள் செய்ய வேண்டிய பல சீர்த்திருத்தங்கள் குறித்தும் பரிந்துரை செய்திருக்கிறோம். இந்த மறுசீரமைப்புகள் எதிர்வரும் காலங்களில் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டால் நாட்டில் சிறந்த பொதுச் சேவையை உருவாக்க முடியும். இதன் மூலம் சிறந்த பொது சேவையை வழங்கி நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் அரச பொறிமுறைக்கும் பங்களிப்பு செய்ய முடியும்.” என்றார்