தீபாவளி, தமிழில் "ஒளி திருவிழா" என அழைக்கப்படும் இந்த பண்டிகை, இந்து சமுதாயத்தின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். தீபம் மற்றும் ஒளி எனும் அர்த்தங்களில் உருவான "தீபாவளி" என்ற பெயர், இருள் மற்றும் அறியாமையை ஒளியால் நீக்குவதைக் குறிக்கின்றது. தீபாவளி என்பது வெறும் பண்டிகை மட்டுமல்ல, இது கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் ஆன்மீக நம்பிக்கைகளின் அடையாளமாகும்.
இந்துக்களால் பரவலாகக் கொண்டாடப்படும் பண்டிகையான தீபாவளி, இந்துக்கள் வசிக்கும் பிற நாடுகளிலும்கூட உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. ஆனால், இந்தப் பண்டிகை எப்படித் தோன்றியது என்பது குறித்து நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு கதை சொல்லப்படுகிறது.
வாத்ஸ்யாயனர் எழுதிய நூல் யட்ஷ் ராத்திரி என்று தீபாவளி பண்டிகையை குறிப்பிடுகிறது. இது கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தன்று இரவில் கொண்டாடப்படுகிறது. இதனை சுகராத்திரி என்று மக்கள் குறிப்பிடுகிறார்கள். விஷ்ணுபுராணம் தீபாவளி அன்று அதிகாலையில் நீராடி மகாலட்சுமி பூஜையை அனுஷ்டித்து தீபங்களை ஏற்றி வீடு நிறைய வைத்தால் லட்சுமி கடாட்சம் கைவர கிடைக்கும் என்கிறது. இந்தப் பண்டிகை பெரும்பாலான வருடங்களில் ஐப்பசி மாதத்தில் வரும் அமாவாசை தினத்தன்று கொண்டாடப்படுகிறது. சில வருடங்களில் மட்டும் அமாவாசைக்கு முந்தைய தினம் கொண்டாடப்படுகிறது. ஆங்கில நாட்காட்டியின்படி, அக்டோபர் 17 முதல் நவம்பர் 15க்கு உட்பட்ட நாட்களில் தீபாவளி பண்டிகை அமைகிறது.இந்துக்கள் மட்டுமல்லாது, சமணர்கள், சீக்கியர்கள் போன்றவர்களும்கூட இந்தப் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.
தீபாவளி பட்டாசு, புத்தாடை, இனிப்புகள் எனக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒவ்வொருவரையும் உற்சாகம்கொள்ள வைக்கும் பண்டிகை. கொண்டாட்டம், குதூகலம் என்ற சொல்லுக்குப் பொருளே தீபாவளிதான். சிலர் இனிப்புகளால் குதூகலம் அடைவர், சிலருக்கு புத்தாடை தரும் மாபெரும் உற்சாகம், நண்பர்களைக் காண்பது, விருந்து உண்பது என்பதில் சிலருக்கு உற்சாகம்.
இந்த பண்டிகை ஐந்துநாள் கொண்டாடப்படும் முக்கிய திருநாளாகும்.அதன் படி :
1. முதல் நாள் திரயோதசி அன்று தனத் திரயோதசி மற்றும் யம தீபம்.
2. இரண்டாம் நாள் சதுர்த்தசி அன்று நரக சதுர்த்தசி தீபாவளி திருநாள்.
3. மூன்றாம் நாள் அமாவாசை அன்று கேதார கௌரி விரதம்.
4. நான்காம் நாள் பிரதமை அன்று கார்த்தீக ஸ்நானம்.
5. ஐந்தாம் நாள் துவிதியை அன்று யமத் துவிதியை.
ராமாயணமும் தீபாவளியும்
தீபாவளி பண்டிகை பல்வேறு புராணக் கதைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.இதில் மிகவும் பிரபலமான கதை, இராமாயணம், இராமன் கொடியவனான இராவணனை அழித்துவிட்டு தனது வனவாசத்தை முடித்து கொண்டு மனைவி சீதையுடன் சகோதரன் லட்சுமணன் உடன் அயோத்திக்கு திரும்பிய நாளை மக்கள் விளக்கேற்றி வரவேற்றனர். அதன் தொடர்ச்சியாக தீபாவளி பிறந்தது என்று சொல்லப்படுகிறது.
நரகாசுரன் அழிக்கப்பட்ட வரலாறும் தீபாவளியும்
தீபாவளியை தீ ஒளி என முன்னோர் குறிப்பிடுகிறார்கள். தீமை அகன்று நன்மை பிறக்கும் நன்னாள் என்கின்றனர். ஒளி என்பது வெற்றியின் அடையாளம். இருள் என்பது தோல்வியின் பொருள். தீபாவளி பண்டிகை தீமையின் வடிவான அசுரர்களை கடவுளின் அவதாரம் அளித்ததால் உருவானது என்கின்றன இந்துப் புராணங்கள். நம்மில் பெரும்பாலானோருக்குத் தெரியும் நராகாசுரன் கதை.பூமாதேவிக்கும் விஷ்ணு பகவானுக்கும் பகுமன் என்ற மகன் பிறக்கிறான். அவர் பல துர்குணங்களை பெற்றிருக்கிறான். அதனால் நரக அசுரன் என்று கூறப்பட்டு நாளடைவில் நரகாசுரன் என்று அழைக்கப்படுகிறான். அவன் வளர்ந்த பிறகு தேவர்களையும் தேவலோக பெண்களையும் மிகவும் துன்புறுத்துகின்றான். அது மட்டுமல்லாமல் பிரம்மாவிடம் தன் தாய் கையால் மட்டுமே தான் இறக்க வேண்டும் என்ற வரத்தையும் பெற்று விடுகிறான்.
இதனை அறிந்த மகாவிஷ்ணு ஸ்ரீ கிருஷ்ணர் அவதாரம் எடுத்து நரகாசுரனுடன் போரிடுகிறான். அப்போது நரகாசுரன் கிருஷ்ணனின் மீது அம்பை எய்துகிறார். இதனால் கிருஷ்ணர் மயக்கம் அடைவது போல் கீழே விழுகின்றார். இதை பார்த்த பூமாதேவி கோபமுற்று சத்தியபாமா என்ற அவதாரம் எடுத்து நரகாசுரனுடன் போரிட்டு அவனை அம்பால் எய்ததால் பழியாகிறான் .
அப்போதுதான் அவள் தன் தாய் என உணர்கிறான். இறக்கும் தருவாயில் ஒரு வரம் கேட்கிறார்.. என் பிடியில் இருந்து விடுபட்ட தேவர்களும் மக்களும் நான் இறந்த நாளை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என கேட்கிறார்.. அதற்கு கிருஷ்ணரும் அந்த வரத்தை கொடுக்கிறார். இந்த வரலாற்று கதைகள் அனைத்தும் நடந்த இடம் வடநாட்டில் தான் .கிபி 15ஆம் நூற்றாண்டில் விஜய நகர பேரரசின் காலத்தில் இருந்துதான் தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதாக முனிவர் தோ பரமசிவன் அவர்கள் கூறுகிறார்.
ஸ்கந்த புராணமும் தீபாவளியும்
மற்றொரு புராண கதையும் உள்ளது ,ஸ்கந்த புராணத்தின் படி பார்வதி தேவியின் 21 நாள் கேதார கௌரி விரதம் முடிவடைந்த பிறகு சிவன் பார்வதியை தன்னுள் பாதியாக ஏற்று அர்த்தநாதீஸ்வரர் உருவம் எடுத்த நாளாக கூறப்படுகிறது. இதனை நினைவுபடுத்துவதாகவும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
மகாபாரதமும் தீபாவளியும்
மகாபாரதத்தில் வாயிலாக ஒரு புராண கதையும் கூறப்படுகிறது . மகாபாரதத்தில் சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள் வனவாசம் அனுப்பப்பட்டனர் .அதன் பின் அவர்கள் போரிட்டு வெற்றி பெற்று நகரம் திரும்பிய போது நாட்டின் மக்கள் அவர்களை வரவேற்கும் விதமாக தீபம் ஏற்றி கொண்டாடியதாகவும் கூறப்படுகிறது.
சமண மற்றும் புத்த சமயமும் தீபாவளியும்
சமண மதத்தின் படி பீகார் மாநிலத்தில் கி.மு 599 இல் பிறந்தவ தான் மகாவீரர். இவர் பிறந்த நாள் மகாவீரர் ஜெயந்தியாக கொண்டாடப்படுவதைப் போல் முக்தி அடைந்த நாளை தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அது மட்டுமல்லாமல் மாமன்னர் அசோகர் புத்த மதத்தை தழுவிய நாள் தீபாவளி ஆக சொல்லப்படுகிறது. அதனை நினைவு கூறும் விதமாக புத்த மதத்தினரும் தீபாவளியை கொண்டாடுகின்றனர். இந்தியா மட்டுமல்லாமல் சிங்கப்பூர், வங்காளதேசம், இலங்கை போன்ற அண்டை நாடுகளும் தீபாவளியை வெளிச்ச நாளாக கொண்டாடுகின்றனர்.
தீபாவளியை உலகின் பல பகுதிகளில் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர். வீட்டில் சுத்தம் செய்து, புதிதாக அலங்கரித்து, விளக்குகளை ஒளிரவைத்து, வண்ணமயமான கோலங்கள் இடுவதும், குடும்பத்தினருடன் சிறப்பு உணவுகளைப் பகிர்ந்து கொள்ளுவதும் வழக்கம். அதேசமயம், இந்த நாளில் பசும் பசும் பட்டாசுகளை வெடிக்கிறார்கள்.
தீபாவளி எனும் இப்பண்டிகை, நம்முள் ஒளியை ஏற்படுத்துவதற்கு வழிகாட்டுகிறது. இது மனதில் உள்ள இருள் மற்றும் அறியாமையை நீக்கி அறிவின் ஒளியை ஏற்படுத்துகின்றது. ஒளியின் வழியே அனைத்து சிரமங்களையும் சமாளிக்கக்கூடியதாக ஆக்கும் ஆன்மீக சிந்தனையை இது நமக்கு அளிக்கிறது.
தீபாவளி என்பது ஒளியின் வெற்றி, மகிழ்ச்சியின் பூரிப்பு, அன்பின் பகிர்வு, மற்றும் நல்லிணக்கத்தின் திருவிழாவாகும். இந்த பண்டிகையை ஒவ்வொரு ஆண்டும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதன் மூலம் நமது வாழ்க்கை ஒளிமயமாகவும் பரவசமூட்டும் திருநாளாகவும் அமைகின்றது.
தீபாவளியை மகிழ்ச்சியோடு கொண்டாடுவதைப் போலவே ஆரோக்கியமாக, பாதுகாப்பாகக் கொண்டாடுவதும் முக்கியம். எனவே, பாதுகாப்போடு கொண்டாடி நம் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குவோம்.
(இராசேந்திரன் நிலக்ஷனா)