தொடர்ந்து தலைவர் தனதுரையில் பின்வருமாறு குறிப்பிட்டார்.மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 நம்பிக்கை நிதி சங்கங்கள் இருந்தபோதும் எமது சங்கமானது 915அங்கத்தவர்களைக் கொண்டு மாவட்டத்தில் இரண்டாம் இடத்தில் வினைத்திறன்மிக்க செயற்பாடுகளுடன் இயங்கிவருவதாகவும், நிர்வாகிகள் சிறப்பாகச் செயற்படுவதுடன் செயலாளர் ஜெயானந்தராசா அர்ப்பணிப்புடன் செயற்படுவதால் அங்கத்தவர்களின் நலன்கள் நல்ல முறையில் பேணப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
அங்கத்தவர்களுக்கான கடன் உட்பட ஏனைய கொடுப்பனவுகளுமாக சுமார் ரூபா 27 இலட்சம் அங்கத்தவர்களுக்கு கடந்த வருடத்தில் வழங்கப்பட்டுள்ளதாக மேலும் அவர் தெரிவித்தார். இதன் மூலம் எமது சங்கம் அங்கத்தவர்களுக்கான சேவை வழங்குவதில் முதல் இடத்தில் இருக்கின்றது. இன்று நாம் அனைவரும் ஓய்வூதியகாரர்கள் என்ற சமத்துவத்தோடு எந்த ஏற்றுத்தாழ்வுமின்றி மலர்ந்த முகங்களோடு இருப்பது மகிழ்ச்சி அளிக்கின்றது. இந்த ஒற்றுமையோடு இருந்தால் மட்டுமே நாம் எமக்கான வரப்பிரசாதங்களை இலகுவாக பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். இதற்கு அனைத்து அங்கத்தவர்களும் உறுதுணையாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
நிருவாக சபையைப் பொறுத்தவரை கடந்த வருடம் சிறப்பாகச் செயற்பட்டதால் அங்கத்தவர்களுக்குரிய கொடுப்பனவுகள் அனைத்தும் தங்குதடையின்றி வழங்கக்கூடியதாக இருந்தது. குறிப்பாக செயலாளர் மிகுந்த அர்ப்பணிப்புடன் அங்கத்தவர் வீடு தேடிச் சென்று அவர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதில் அயராது பாடுபட்டவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
அத்துடன் தனது சொந்த வீட்டிலேயே எவ்வித எதிர்பார்ப்புமின்றி காரியாலயம் ஒன்றையும் திறந்து இரவு பகலாக செயலாற்றுவது சிறப்பம்சமாகும். செயலாளரால் செயற்பாட்டறிக்கையும், பொருளாளரால் கணக்கறிக்கையும் வாசிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. அங்கத்தவர்களை மகிழ்ச்சிப்படுத்த அருமையான இரு நடன நிகழ்வுகளும் இடம்பெற்றது.
தொடர்ந்து புதிய நிருவாகசபை தெரிவு இடம் பெற்றது. தலைவராக துரைராசாவும் செயலாளராக ஜெயானந்தராசாவும் பொருளாளராக பொன்னுத்துரையும், மீண்டும் இம்முறையும் ஏகமனதாகத்தெரிவு செய்யப்பட்டனர். ஏனைய தெரிவுகளும் அவ்வாறே இடம் பெற்றது. கணக்காய்வாளராக ஓய்வுநிலை அதிபர் எஸ்.முருகானந்தம் தெரிவுசெய்யப்பட்டார்.