நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் நாளை முதல் மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும். இதேவேளை நாட்டிற்கு மேலாகவும் நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களிலும் பலத்த காற்றும் வீசக் கூடும். ஆகையினால் பொதுமக்கள் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளிவிடுகின்ற எதிர்கால எதிர்வு கூறல்களை கவனத்திற் கொண்டு செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.
வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.
மத்திய மலைப் பிராந்தியங்களின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய , வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு சுமார் 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும்.
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை பெய்யக்கூடும்.
மன்னார் தொடக்கம் காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் தென் மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.
சிலாபம் தொடக்கம் புத்தளம், மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான அத்துடன் காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும். காற்றின் வேகம் அடிக்கடி மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றராக அதிகரித்தும் காணப்படும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும்.
நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 முதல் 35 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும். சிலாபம் தொடக்கம் கொழும்பு ஊடாக காலி வரையான அத்துடன் காங்கேசன்துறை தொடக்கம் முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 45 முதல் 50 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.
ஹம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது சுமார் 2.5 - 3.0 மீற்றர் உயரத்திற்கு மேலெழக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
ஆகையினால் கடலுக்கு செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் அவதானத்துடன் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.