வவுனியாவில் அரச கால்நடை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு


வவுனியாவில் அரச கால்நடை வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக கால்நடை வளர்ப்பாளர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

அரச கால்நடை வைத்தியர்களுக்காக தனியான பணி யாப்பு உருவாக்கப்பட்ட போதிலும், அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என குற்றஞ்சாட்டியுள்ள கால்நடை வைத்தியர்கள் சங்கத்தினர், அந்த யாப்பினை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த பணிப்புறக்கணிப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக வவுனியா அரச கால்நடை வைத்திய அலுவலகங்களிலும் கால்நடை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், பொதுமக்கள், தங்கள் கால்நடைகளுக்கான மருத்துவ சேவையை பெற்றுக்கொள்வதற்காக கால்நடை வைத்தியசாலைகளுக்குச் சென்று, வைத்தியர்கள் இல்லாத காரணத்தினால் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.