7 வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் - சித்தப்பாவுக்கு கடூழிய சிறைத்தண்டனை விதித்தது மட்டக்களப்பு மேல் நீதிமன்றம்


மட்டக்களப்பு மாவட்டத்தில் 2007ஆம் ஆண்டில் 7 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைதான, பாதிக்கப்பட்ட சிறுமியின் சித்தப்பாவுக்கு சிறைத் தண்டனையும் அபராதமும் விதித்து மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் தீர்ப்பளித்தார்.

அதன்படி, குறித்த நபருக்கு, அவர் செய்த முதலாவது குற்றத்துக்கு 2 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், இரண்டாவது குற்றத்துக்கு 7 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 இலட்சம் ரூபாய் நஷ்ட ஈடும் வழங்குமாறு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

2007இல் 7 வயது சிறுமியினது தந்தையின் சகோதரனான 32 வயதுடைய சித்தப்பா, அச்சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதையடுத்து, அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அதனையடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் நீதிமன்ற பிணையில் வெளிவந்த நிலையில், அவருக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கு இடம்பெற்று வந்துள்ளது.

குறித்த நபர், 16 வயதுக்கு உட்பட்ட சிறுமியை கடத்திச் சென்றமை, பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை ஆகிய இரு குற்றச்சாட்டுகள் சாட்சியங்கள், சான்றுப் பொருட்கள் மற்றும் சட்ட வைத்தியர் அறிக்கை மூலம் நிரூபிக்கப்பட்டு, அந்த நபர் குற்றவாளியாக கடந்த 11ஆம் திகதி வியாழக்கிழமை இனங்காணப்பட்டார்.

இதனையடுத்து, இவ்வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே மேற்படி தீர்ப்பளித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.