கிழக்குப் பல்கலைக்கழக இந்துநாகரிகத்துறைத் தலைவர் கலாநிதி நா.வாமன் பேராசிரியராகப் பதவி உயர்வு



இலங்கை, கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இந்துநாகரிகத் துறையின் தலைவராகப் பணியாற்றிவரும் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி நா.வாமன் பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார். 27.09.2025 அன்று கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பேரவைக் கூட்டத்தில் இப்பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சுற்றறிக்கை நியமங்களுக்கு அமைய, திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்த கிழக்குப் பல்கலைக்கழக இந்துநாகரிகத்துறைத் தலைவர் கலாநிதி நா.வாமன் அவர்களின் விண்ணப்ப மதிப்பீடு மற்றும் நேர்முகத் தேர்வு முடிவுகள் 27.09.2025 ஆம் திகதி இடம்பெற்ற பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையிலேயே கலாநிதி நா.வாமன் இந்துநாகரிகப் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு, புன்னைச்சோலையைப் பிறப்பிடமாகக் கொண்ட பேராசிரியர் நா.வாமன், தனது பாடசாலைக் கல்வியை மட்ஃ அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் மகா வித்யாலயத்திலும் மட்;ஃ இந்துக் கல்லூரியிலும் பெற்றுக்கொண்டார். பின் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இந்துநாகரிகத்தை சிறப்புக் கற்கையாக மேற்கொண்டு (B.A(Hons) முதலாம் வகுப்பில் சித்தியடைந்தார்.

 தொடர்ந்து, பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மெய்யியலில் பட்டப்பின் டிப்ளோமாக் கற்கையினையும் (PGD in Philosophy), மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மெய்யியல் மற்றும் சமயத்தில் முதுகலைமாணிப் பட்டத்தினையும் (M.A in Philosophy and Religion), யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இந்துநாகரிகத்தில் முதுதத்துவமாணிப் பட்டத்தினையும் (MPhil in Hindu Civilization), பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இந்துநாகரிகத்தில் கலாநிதிப் பட்டத்தினையும் (PhD in Hindu Civilization) பெற்றுக்கொண்டார்.

கிழக்குப் பல்கலைக்கழக இந்துநாகரிகத்துறையில் தற்காலிக உதவி விரிவுரையாளராகவும் (2009-2011) பின் பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறையில் இந்துப் பண்பாட்டுக்கான தற்காலிக விரிவுரையாளராகவும் (2012-2014) பணியாற்றி 2014 முதல் கிழக்குப் பல்கலைக்கழக இந்துநாகரிகத்துறையில் நிரந்தர விரிவுரையாளராகப் பணியாற்றி வரும் பேராசிரியர் நா.வாமன் அவர்கள் பல்கலைக்கழக கற்பித்தல் செயற்பாடுகளுக்கு அப்பால், இலங்கை அரச நிறுவனங்கள் பலவற்றில் வளவாளராகவும் ஆலோசகராகவும் செயற்பட்டுக் கொண்டிருப்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.