
2020 -2025 வரையான காலப்பகுதியில் ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களை தவிர்த்து ஏனைய மாகாணங்களில் 101 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. வளப்பற்றாக்குறை காரணமாகவே இந்த பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. பாடசாலை ஒன்றை மூடுவது சாதாரனதாரு விடயமல்ல, வளப்பற்றாக்குறை காரணமாக மூடப்பட்ட பாடசாலைகளை மீளத்திறப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சிறந்த தீர்மானங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிங்ஸ் நெல்சன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (25) நடைபெற்ற 2026 வரவு செலவுத் திட்டத்தின் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது;
ஒன்பதாவது பாராளுமன்றத்தில் வரவு - செலவுத் திட்டத்தில் உரையாற்றிய பிரதமர் ஹரிணி அமரசூரிய இலவச கல்வி சேவையை மேம்படுத்துவது பற்றி பல விடயங்களை குறிப்பிட்டிருந்தார்.மொத்த தேசிய உற்பத்தியில் கல்விக்கு 6 சதவீதம் நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்று போராடினார் .இன்று அவர் தான் கல்வி அமைச்சராக பதவி வகிக்கிறார்.
கல்வித்துறை மேம்பாடு பற்றி பிரதமர் கடந்த காலங்களில் குறிப்பிட்ட விடயங்கள் நடைமுறையில் செயற்படுத்தப்பட வேண்டும்.ஜனாதிபதி அதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவார் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
நாடளாவிய ரீதியில் 10709 பாடசாலைகள் உள்ளன.இவற்றில் 396 தேசிய பாடசாலைகளாகும்.தேசிய பாடசாலைகளில் பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடத்துக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்படவில்லை. அதிபர் இல்லாமல் பாடசாலை நிர்வாகம் செயற்படும் போது பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும.
ஆசிரியர் சேவையில் 36 ஆயிரம் ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகிறது. 2025.12.31 ஆம் திகதியன்று சுமார் 8 ஆயிரம் ஆசிரியர் சேவையில் இருந்து ஓய்வுப் பெறவுள்ளார்கள். மொத்தமாக ஆசியர் சேவையில் 44 ஆயிரம் ஆசிரியர் பற்றாக்குறை நிலவும். இதற்கான தீர்வு என்ன முன்வைக்கப்பட்டுள்ளது.
2023 முதல் 2024 வரையான காலப்பகுதியில் 25 ஆயிரம் மாணவர்கள் பாடசாலை கல்வியில் இருந்து இடைவிலகியுள்ளார்கள்.அதேபோல் 2020 -2025 வரையான காலப்பகுதியில் ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களை தவிர்த்து ஏனைய மாகாணங்களில் 101 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. வளப்பற்றாக்குறை காரணமாகவே இந்த பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.
ஒரு பிரதேசத்தில் பாடசாலை ஒன்றை மூடுவது சாதாரனதொரு விடயமல்ல, வளப்பற்றாக்குறை காரணமாக மூடப்பட்ட பாடசாலைகளை மீளத்திறப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சிறந்த தீர்மானங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.





.jpeg)




