உயர்நீதிமன்ற நீதிபதி உட்பட 20 நீதித்துறை அதிகாரிகள் தவறான நடத்தைக்காக பணிநீக்கம் !



உயர் நீதிமன்ற, மேல், மாவட்ட நீதிபதிகள், நீதித்துறை சேவை ஆணைக்குழுவின் அதிகாரிகள் உள்ளிட்ட இருபர் பேர் பதவி நீக்கப்பட்டுள்ளதாக தெரவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இருபது பேரில் ஏழு பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதோடு, ஏனையவர்களுக்கு பணி இடைநீக்கம், கட்டாய ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

நீதித்துறையில் உள்ளவர்களுக்கு எதிராக பொதுமக்கள் அளித்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், தவறான செயல்களில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டவர்கள் மீது இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதில் ஓய்வுபெறும் வயதை அண்மித்துள்ளவர்களுக்கு தாமாகவே சேவையில் இருந்து வெளியேறிச் செல்வதற்கு காலவரையறை அளிக்கப்பட்டுள்ளது.

ஊழல், மோசடிகள் உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்பவர்கள் மீது, குற்றப்பத்திரிகைகள் சமர்ப்பிக்கப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட நிலையில், பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேனவால் பதவி நீக்கம் செய்வதற்கான கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விசாரணைக்காக அழைக்கப்பட்ட சில நீதித்துறை அதிகாரிகள் விசாரணைக் குழுக்களின் முன் ஆஜராகியிருக்காத நிலையில் அவர்கள் விசாரணையை எதிர்கொள்ளாமல் சேவையை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளனர்.

இதேவேளை, உயர் நீதிமன்றத்தில் தற்போது பத்து வெற்றிடங்கள் காணப்படுவதோடு நீதவான் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் சுமார் 60 வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

இந்நிலையில் குறித்த வெற்றிடங்களை நிரப்புவதற்காக சேவை மூப்பு மற்றும் திறமையின் அடிப்படையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.