கல்விப் பொதுத் தராதர உயர்தர பொருளியல் பரீட்சை வினாத்தாள் பரீட்சைக்கு முன்னதாகவே வெளியிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனினும் அது உறுதிப்படுத்தபடவில்லை. வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையில் குற்றப்புலனாய்வுப்பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (25) அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இடம்பெற்ற போது, இது குறித்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
உயர்தர பொருளியல் பரீட்சை வினாத்தாள் பரீட்சைக்கு முன்னதாகவே வெளியிடப்பட்டுள்ளதாக அளிக்கப்பட்டுள்ள முறைப்பாட்டுக்கமைய குற்றப்புலனாய்வுப்பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. உண்மையில் வினாத்தாள் வெளியாகியுள்ளதா என்பதை தற்போது ஸ்திரமாகக் கூற முடியாது. எனவே குற்றப்புலனாய்வுப்பிரிவின் விசாரணை அறிக்கைக்கமைய அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
உயர்தரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள் பரீட்சைக்கு முன்னரே வெளியாகியதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்திகள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு பரீட்சைத் திணைக்களம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடளித்துள்ளது.
பரீட்சை திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்ட உள்ளக விசாரணைகளில், அத்தகைய சம்பவம் நடந்ததற்கான உறுதியான ஆதாரம் எதுவும் கண்டறியப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த விடயம் குறித்து உரிய விசாரணை நடைபெறுவதை உறுதி செய்வதற்காகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டதாகத் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






.jpeg)




