உர மானிய விலை தொடர்பில் தீர்மானம் !



உலக சந்தை நிலவரத்தை கருத்தில் கொண்டு உர மானிய விலையைத் தீர்மானிக்க வேண்டும் என விவசாய, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்தார்.

நெல் விவசாயிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான முறைப்படியான வேலைத்திட்டமொன்றைத் தயாரிப்பது தொடர்பில், ஜனாதிபதி செயலகத்தில் விவசாயிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் கே.டி. லால்காந்த, நெல் பயிர்செய்கை தொடர்பில் நீண்ட காலமாக அவதானம் செலுத்தி, நெல் விவசாயியைப் பாதுகாப்பதற்குத் திட்டவட்டமான வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

எவ்வாறாயினும், ஏனைய பயிர்கள் தொடர்பில் நாட்டில் இதுவரை திட்டவட்டமான வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

நெல் விவசாயிகளைப் போலவே அனைத்து விவசாயிகளையும் பாதுகாத்து, அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

விவசாயி, அரச அதிகாரி மற்றும் அரசியல்வாதி ஆகியோர் இனியும் பிளவுபட்டு செயற்படாமல், இனிவரும் காலங்களில் அனைத்துத் தரப்பினரும் இணைந்து ஒரே குழுவாகச் செயற்பட்டு விவசாயிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அரிசி இறக்குமதியை மட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு நெல் உற்பத்தியை மேலும் அதிகரிப்பது குறித்தும், நெல் கொள்முதல் விலைப் பொறிமுறையை முறைப்படுத்துவது குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

உற்பத்திச் செலவைக் குறைத்து விவசாயியைப் பாதுகாப்பதோடு, நுகர்வோருக்குத் தரமான அரிசியை நிவாரண விலையில் வழங்குவது குறித்தும் இங்கு அவதானம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

விவசாயிக்கு அநீதி ஏற்படாத வகையில் நெல்லுக்கு நிலையான விலையை நிர்ணயிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் இங்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நெல் விவசாயத்திற்கான உர மானியம் கிடைக்காததினால் தாம் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும், உரத்தைக் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் வழங்கும் பணத்தை வங்கியில் வைப்புச் செய்வதற்கு விரைவான வேலைத்திட்டமொன்றைத் தயாரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்ட அம்பாறை பிரதேச விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.