கஞ்சா பயிரிட ஆறு நிறுவனங்களுக்கு பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளதாக ஓமல்பே சோபித்த தேரர் தெரிவிப்பு !


அரசாங்கம் ஆறு நிறுவனங்களுக்கு கஞ்சா பயிரிட அனுமதி வழங்கி, அதற்காக 66 ஏக்கர் காணியை ஒதுக்கியுள்ளதாக ஓமல்பே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார்.

இது போதைப்பொருளுக்கு அடிமையாதல் மற்றும் கடத்தலைத் தடுக்க ‘ரட்ட எக்கட்ட’ (Ratama Ekata) எனும் திட்டம் ஆரம்பிக்கப்படடிருக்கும் வேளையில் நடந்துள்ளது என மேலும் தெரிவித்துள்ளார்.

“ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, போதைப்பொருள் கடத்தல் மற்றும் அடிமையாதலை தடுக்க முக்கிய திட்டமொன்றை மேற்கொண்டுள்ளார். இது எதிர்கால தலைமுறைகளுக்காக எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம் ஒன்றாகும். ஆனால் அதேவேளை, 66 ஏக்கர் நிலம் ஆறு நிறுவனங்களுக்கு கஞ்சா பயிரிட வழங்கப்பட்டுள்ளது,” என தேரர் குறிப்பிட்டுள்ளார்.

“1929ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க‘அபீயம் மற்றும் ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின்’ கீழ் கஞ்சாவை வளர்ப்பது, வைத்திருப்பது அல்லது இறக்குமதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. அந்தச் சட்டம் இன்னும் அமுலில் உள்ளது,” எனவும் அவர் நினைவூட்டியுள்ளார்.

முன்னாள் பிரதி அமைச்சரான டயானா கமகே முன்மொழிந்த கஞ்சா பயிரிடும் கொள்கை முன்னாள் அரசாங்கம் தோல்வியுறக் காரணமான ஒன்றாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“அரசாங்கம் கஞ்சா செடி பயிரிட அனுமதிக்கும் கொள்கையை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,” எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை, இந்த தீர்மானத்தை அரசாங்கம் உண்மையில் அனுமதித்திருந்தால், அதற்கான தகுந்த ஆய்வு அறிக்கைகளை வெளியிட வேண்டும் என தேரர் கோரியுள்ளார்.

“அரசாங்கத்தின் கஞ்சா ஏற்றுமதி திட்டம் தோல்வியடைந்தால், அதன் உற்பத்திபொருட்களுக்கு என்ன ஆகும்?” எனவும் சோபித தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.