இயற்கை வன வளங்களைப் பாதுகாக்கும் நோக்கில், 'வனப் பாதுகாப்பு' கூட்டு செயல்பாட்டுப் பிரிவு இன்று (03) முதல் செயற்படுத்தப்படவுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த செயல்பாட்டுப் பிரிவு 24 மணி நேரமும் இயங்கும் 1995 என்ற துரித தொலைபேசி இலக்கம் ஊடாகச் செயற்படுத்தப்படும்.
சுற்றாடல் அமைச்சின் கீழ் நிறுவப்படும் இந்த பிரிவில் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம், வனப் பாதுகாப்பு திணைக்களம், பொலிஸ் விஷேட அதிரடிப்படை மற்றும் முப்படையின் பிரதிநிதிகள் அங்கம் வகிப்பார்கள்.
இதன் மூலம், இலங்கையின் வனப் பகுதிகளுக்கு ஏற்படும் சேதங்கள் மற்றும் அது தொடர்பான தகவல்களை பொதுமக்கள் வழங்க முடியும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
அதிகரித்து வரும் வனக் குற்றங்கள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கும், அந்தக் குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், பொதுமக்கள் நம்பகத்தன்மையுடன் தகவல்களை வழங்கக்கூடிய பின்னணியை உருவாக்குவதற்கும், முப்படையினர், விஷேட அதிரடிப்படை, வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் வனப் பாதுகாப்புத் திணைக்களங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளைக் கொண்ட இந்த செயல்பாட்டுப் பிரிவைச் செயற்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கமைய, இந்த செயல்பாட்டுப் பிரிவை சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக பட்டபெந்தி மற்றும் பிரதி அமைச்சர் என்டன் ஜயக்கொடி ஆகியோரின் தலைமையில் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது.


.jpeg)










