பாடசாலைகளுக்கு வளங்களை பெற்றுக்கொடுக்கும்போது, தேசிய பாடசாலை, மாகாண பாடசாலை என நாங்கள் பிரித்துப் பார்ப்பதில்லை - பிரதமர் !


பாடசாலைகளுக்கு வளங்களை பெற்றுக்கொடுக்கும்போது, நாங்கள் தேசிய பாடசாலை, மாகாண பாடசாலை என பிரித்துப் பார்ப்பதில்லை. தேவைக்கு ஏற்றவகையில் தேவைகளை பூர்த்திசெய்ய நடவடிக்கை எடுப்போம். அதேநேரம் தேசிய பாடசாலைகள் என பெயரிடும் திட்டம் எமக்கில்லை என பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (24) இடம்பெற்ற வாய்மூலமான விடைக்கான வினாக்கள் நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் எம்.பி, தனது கேள்வியில்,

தம்பலகாமம் பிரதேசத்தில் கல்வி மட்டத்தில் இனவாத செயற்பாடுகள் இடம்பெறுவதை காணக்கூடியதாக இருக்கிறது. குறிப்பாக அந்த பிரதேசத்தில் இருக்கும் சிங்கள பாடசாலைகள் கந்தலாய் கல்வி வலயத்திலும் தமிழ் பாடசாலைகள் திருகோணமலை கல்வி வலயத்திலும் முஸ்லிம் பாடசாலைகள் கிண்ணியா கல்வி வலயத்திலும் இணைக்கப்பட்டு இனவாதமாக பார்க்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதனால் தம்பலகாமம் பிரதேசத்தில் கல்வி வலயம் ஒன்றை ஏற்டுத்தி, அந்த பிரதேசத்தில் இருக்கும் அனைத்து பாடசாலைகளையும் ஒரு வலயத்துக்கு கீழ் கொண்டுவருவதன் மூலம் அது ஆராேக்கியமானதாக இருக்கும். அதனால் கடந்த காலங்களில் இனவாத நடவடிக்கைகள் இருந்தமையால் இந்த நடவடிக்கைகள் செயற்படுத்தப்படவில்லை. என்றாலும் இந்த அரசாங்கம் இனவாதமற்ற அரசாங்கம் என்பதால், தம்பலகாமம் பிரதேசத்தில் இருக்கும் அனைத்து பாடசாலைகளையம் ஒரே கல்வி வலயத்த்துக்கு கீழ் கொண்டுவர முடியுமான வகையில், தம்பலகாமம் பிரதேசத்தில் கல்வி வலயயம் ஒன்றை எற்படுத்த முடியுமா என கேட்கிறேன்.

அதேநேரம் திருகோணமலை மற்றும் கந்தலாய் கல்வி வலயங்களில் இருக்கும் எந்த பாடசாலையும் மத்திய அரசாங்கத்துக்கு கீழ் இல்லை, அதனால் அனைத்து துறைகளிலும் முன்னிலையில் இருக்கும் திருகாேணமலை ஸாஹிரா பாடசாலையை தேசிய பாடசாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க முடியுமா என கேட்கிறேன் என்றார்.

கல்வி வலயங்கள் தொடர்பில் தீரமானிக்கும்போது பல விடயங்களை அடிப்படையாக்கொண்டே தீர்மானிக்கப்படுகிறது.அதனால் எதிர்வரும் காலங்களில் நாங்கள் மேற்கொள்ள இருக்கும் மீளாய்வு நடவடிக்கைகளின்போது, இந்த விடயம் தொடர்பாக கருத்திற்கொண்டு சிறந்த தீர்மானம் மேற்கொள்ள முயற்சிப்போம்.

மேலும் பாடசாலைகளுக்கு வளங்களை பெற்றுக்காெடுக்கும்போது, நாங்கள் தேசிய பாடசாலை, மாகாண பாடசாலை என பிரித்துப்பார்ப்பதில்லை. அதனை நாங்கள் நிராகரிக்கிறோம். தேசிய பாடசாலை அமைக்க நாங்கள் எதிர்பார்ப்பதில்லை. அனைத்து பாடசாலைகளுக்கும் வளங்களை பெற்றுக்கொடுத்து, முன்னேற்றுவதே எமது எதிர்பார்ப்பாகும். அதனால் தேசிய பாடசாலைகள் என பெயரிடுவது தொடர்பில் எங்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை என்றார்.