வவுனியாவில் தீக்கிரையான விற்பனை நிலையம்


வவுனியா ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள விற்பனை நிலையம் ஒன்றில் இன்றையதினம் காலை திடீர் தீ ஏற்பட்ட நிலையில் விற்பனை நிலையம் முற்றாக தீக்கிரையாகியுள்ளது.
 
குறித்த விற்பனை நிலையத்தின் மேற்தளத்தில் இன்றையதினம் காலை திடீர் தீப்பரவல் ஏற்ப்பட்டுள்ளது. அதனை அணைக்க ஊழியர்களால் முயற்சி செய்யப்பட்ட நிலையில் கட்டுங்கடங்காத தீ அனைத்து இடங்களிலும் பரவி விற்பனை நிலையம் முழுவதும் பரவியது

சம்பவம் தொடர்பாக வவுனியா மாநகர சபையின் தீயணைப்பு பிரிவிற்கு அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு பிரிவின் ஊழியர்கள் பொதுமக்கள் இளைஞர்கள், தீயை அணைக்க கடும் பிரயத்தனத்தை முன்னெடுத்த போதும் கட்டுங்கடங்காத தீ அனைத்து இடங்களிலும் பரவி விற்பனை நிலையம் முழுதும் முற்றாக எரிந்து நாசமாகியது. தீயை அணைப்பதற்காக இராணுவம் பொலிசாரின் உதவிகளும் கோரப்பட்டிருந்தது.

தீப்பரவல் விற்பனை நிலையத்திற்கு அருகாமையில் இருந்த ஏனைய வியாபார நிலையங்களுக்கும் பரவமுற்பட்ட நிலையில் கடும் முயற்சிக்கு மத்தியில் அது தடுக்கப்பட்டது.

இவ் விபத்தில் விற்பனை நிலையத்தில் இருந்த கோடிக்கணக்காண இலத்திரனியல் பொருட்கள்,மற்றும் ஆவணங்கள், தீயில் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் வவுனியா பொலிசார் தடயவியல் பொலிசாரின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.