தேவ ஆசிர்வாதம் மூலம் நோயினை குணப்படுத்துவதாக கூறி சிறுமியின் உடலில் தீக் காயங்களை ஏற்படுத்திய பெண் பூசாரிக்கு விளக்கமறியல்!


தேவ ஆசிர்வாதம் மூலம் நோயினை குணப்படுத்துவதாக கூறி சிறுமி ஒருவரது கையில் பாக்கு வெட்டினால் (கிரய )உடலின் பல பகுதிகளில் தீக் காயங்களை ஏற்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண் பூசாரி ஒருவரை எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கெப்பித்திகொல்லாவ நீதிமன்ற நீதிவான் செவ்வாய்க்கிழமை (25) உத்தரவிட்டுள்ளார்.

அநுராதபுரம் ஹொரவபொத்தான பொலிஸ் பிரிவின் வெலிமுவபொத்தான பகுதியில் தேவாலயம் ஒன்றினை நடாத்திச்செல்லும் அப்பகுதியை வசிப்பிடமாக கொண்ட 45 வயதுடைய பெண் பூசாரி ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மதவாச்சி,ஊராபீனுவெவ,பிஹிம்பியகொல்லாவ பகுதியை வசிப்பிடமாக கொண்ட கெப்பித்திகொல்லாவ பகுதியிலுள்ள அரச பாடசாலையொன்றில் உயர்தர வகுப்பில் கல்வி பயிலும் மாணவி தமது தாய் தந்தையர்களுடன் 22 ஆம் திகதி அன்று ஹொரவபொத்தான,வெலிமுவபொத்தான பகுதியிலுள்ள பெண் பூசாரியின் தேவாலயத்திற்கு சென்று அன்றையதினம் இரவு இடம்பெற்ற தேவ ஆசிர்வாத மூலம் நோயினை குணப்படுத்தும் சடங்கில் கலந்து கொண்ட போதே இந்த சம்பவம் நேர்ந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரவபொத்தானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆர்.பீ.ஜயசிங்க அவர்களின் ஆலோசனைப்படி சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.