மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வருடம் ஜனவரி 1-ஆம் திகதி முதல் நேற்று வரை 16 பேர் உயிர்மாய்த்துள்ளதாக தகவல்


மட்டக்களப்பு கல்லடி பழைய பாலத்தின் மேல் இருந்து வாவியில் குதித்து உயிரைமாய்த்துக்கொள்ள முயன்ற 20 வயதுடைய யுவதி ஒருவர் உயிரைமாய்த்துக்கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை (23) இரவு இடம்பெற்றுள்ளது.

தாழங்குடா வைச் சேர்ந்த 20 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரைமாய்த்துக்கொண்டுள்ளார்.

இந்த யுவதி உயிரைமாய்த்துக்கொள்வதற்காக நேற்று இரவு 7.15 மணியளவில் கல்லடி பழைய பாலத்தின் மேல் இருந்து வாவிக்குள் குதித்துள்ளார்.

இதன்போது மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் சிலர் இதனை கண்டதையடுத்து அப்பகுதியில் இருந்த இளைஞர்கள் மற்றும் பொலிஸார் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் யுவதியின் சடலம் வாவியில் இருந்து கரைக்கு எடுத்துவரப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த யுவதி கடந்த வருடம் உயர்தர பரீட்சை தோற்றியவர் எனவும் காதல் விவகாரத்தால் இவ்வாறு உயிரைமாய்த்துக்கொண்டுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த யுவதியின் உயிர்மாய்ப்பை அடுத்து இந்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் நேற்று 23 ஆம் திகதி வரை மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 இளம் யுவதிகள் 75 வயதுடைய 3 முதியோர் வரை 16 பேர் உயிரைமாய்த்துக்கொண்டுள்ளதாக பொலிஸாரின் புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்து. மாவட்டத்தில் தொடர்ச்சியாக உயிர்மாய்ப்பு சம்பவங்கள் இடம்பெற்று வருவதையடுத்து பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.