சதொச நிறுவனத்திற்கு 1.7 கோடி ரூபா நட்டத்தை ஏற்படுத்திய முன்னாள் சிரேஷ்ட முகாமையாளர் உட்பட மூவர் கைது


லங்கா சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான சுமார் 54 ஆயிரம் கிலோகிராம் வெள்ளைப்பூண்டை குறைந்த விலைக்கு விற்பனை செய்ததன் மூலம், அரசாங்கத்திற்கு 1.7 கோடி ரூபாவிற்கும் அதிக நஷ்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அந்நிறுவனத்தின் முன்னாள் சிரேஷ்ட முகாமையாளர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் வியாழக்கிழமை (29) காலை இந்த கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அமைச்சரவை அனுமதி மற்றும் லங்கா சதொச நிறுவனத்தின் நடைமுறையில் உள்ள சட்டவிதிகளுக்கு முரணாகச் செயற்பட்டுள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சதொச நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்படும் என்று தெரிந்தே, ஒரு தனியார் வர்த்தகருக்கு அனுகூலம் அளிக்கும் நோக்கில் இந்த ஊழல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய 54,860 கிலோகிராம் வெள்ளைப்பூண்டை, ஒரு கிலோகிராம் வெறும் 135 ரூபாய் என்ற குறைந்த விலைக்குத் தனியார் தரப்புக்கு விற்பனை செய்துள்ளனர். இதன் காரணமாக லங்கா சத்தொச நிறுவனத்திற்கு 17,006,600 (ஒரு கோடியே எழுபது இலட்சத்து ஆறாயிரத்து அறுநூறு) ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.