“கணேமுல்ல சஞ்சீவ” படுகொலை ; இஷாரா செவ்வந்தி மேலும் 90 நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை !


“கணேமுல்ல சஞ்சீவ” படுகொலை தொடர்பில் நேபாளத்தில் கைதுசெய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டதையடுத்து பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியை மேலும் 90 நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்குட்படுத்தவுள்ளதாக கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவு, கடந்த 23 ஆம் திகதி கொழும்பு மேலதிக நீதவான் அசங்க.எஸ்.போதரகமவுக்கு அறிவித்துள்ளது.

கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் “கணேமுல்ல சஞ்சீவ” படுகொலையுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து, நேபாள அரசாங்கத்தின் உதவியுடன் இலங்கை பொலிஸார் மற்றும் சர்வதேச பொலிஸார் இணைந்து மூன்று நாட்களாக நேபாளத்தில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது இஷாரா செவ்வந்தி உட்பட மேலும் ஐந்து பேர் கடந்த 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் 14 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதையடுத்து இஷாரா செவ்வந்தி பொலிஸ் தடுப்ப காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.