இ.போ.ச சாரதிகளுக்கு திடீர் போதைப்பொருள் பரிசோதனை நடவடிக்கை !


இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், ஒழுக்கமான சாரதி சமூகத்தை உருவாக்குவதற்கும் போக்குவரத்து அமைச்சு புதிய விசேட வேலைத்திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி, இலங்கை போக்குவரத்து சபையின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் போதைப்பொருட்களைப் பயன்படுத்தியுள்ளனரா என்பதைக் கண்டறியும் விசேட சோதனை நடவடிக்கைகள் நேற்றைய தினம் முதல் நாடு தழுவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த விசேட வேலைத்திட்டம் நேற்று வியாழக்கிழடை (08) காலை 8.30 மணியளவில் மட்டக்குளி பேருந்து டிப்போ வளாகத்தில் உத்தியோகபூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது. தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனம், போக்குவரத்து அமைச்சு மற்றும் இலங்கை பொலிஸார் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுக்கின்றனர். இதற்காக நவீன வசதிகளுடன் கூடிய நடமாடும் ஆய்வுக்கூடப் பேருந்து ஒன்று தயார்ப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சோதனையின் போது சாரதிகளிடம் இருந்து உமிழ்நீர் மாதிரிகள் பெறப்பட்டு, சுமார் அரை மணித்தியாலத்திற்குள் முடிவுகள் அறிவிக்கப்படும். குறிப்பாக, மதுபானம் தவிர்த்து ஏனைய அபாயகரமான போதைப்பொருட்களை கடந்த 14 நாட்களுக்குள் பயன்படுத்தியிருந்தாலும் இச்சோதனை மூலம் துல்லியமாகக் கண்டறிய முடியும் என இந்திரிக சந்திம இலங்கை போக்குவரத்து சபையின் பயிற்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவு பிரதிப் பொது முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான சோதனைகள் முன்கூட்டியே அறிவிக்கப்படாமல், டிப்போக்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் ஊழியர் ஓய்வறைகளில் திடிரென மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சோதனையில் போதைப்பொருள் பயன்படுத்தியமை உறுதி செய்யப்படும் ஊழியர்களுக்கு எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக, இவ்வாறான பழக்கங்களுக்கு அடிமையானவர்களுக்குத் தேவையான உளவியல் ஆலோசனைகள் மற்றும் புனர்வாழ்வு வழிகாட்டல்களை வழங்கவும் தீர்மானித்துள்ளது.

எனினும், பணியின் போது போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது கண்டறியப்பட்டால் சட்டரீதியான மற்றும் துறைசார்ந்த கடுமையான தண்டனைகள் வழங்கப்படும்.

இலங்கை போக்குவரத்து சபை தனது புதிய ஊழியர்களைப் பணியமர்த்தும் போதும் இவ்வாறான போதைப்பொருள் பரிசோதனைகளை மேற்கொள் வேண்டும் என தெரிவித்துள்ளது.

மேலும், இந்த வேலைத்திட்டத்தைத் தனியார் பேருந்து சாரதிகளுக்கும் விரிவுபடுத்துவது குறித்து தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடன் இணைந்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பான மற்றும் வசதியான போக்குவரத்துச் சேவையை பொதுமக்களுக்கு வழங்குவதே இந்த தேசிய திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.