இலஞ்சம் பெற்ற வனஜீவராசிகள் அதிகாரி கைது



30 ஆயிரம் ரூபா பணம் மற்றும் உயர் ரக மதுபான போத்தல் ஒன்றினை இலஞ்சமாகக் கோரிப் பெற்ற வனஜீவராசிகள் அலுவலக அதிகாரி ஒருவர், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை, ஹூலங்னுகே பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் அளித்த முறைப்பாட்டுக்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, திங்கட்கிழமை (12) பிற்பகல் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

முறைப்பாட்டாளர் மற்றும் அவரது மனைவியின் பெயரில் தனித்தனியாக சுமார் 4 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்து வந்துள்ளார். எனினும், குறித்த காணியின் ஒரு பகுதி பாதுகாப்பு வனப்பகுதிக்குச் சொந்தமானதாகும்.

குறித்த பகுதியில் முறைப்பாட்டாளர் சட்டவிரோதமாகப் பயிர்ச்செய்கை மேற்கொண்டு வந்த நிலையில், அவருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக 30 ஆயிரம் ரூபா பணத்தையும், உயர் ரக மதுபான போத்தல் ஒன்றையும் வனஜீவராசிகள் அலுவலக உத்தியோகத்தர் கோரி பெற்றுக் கொண்டுள்ளார்.

இதனையடுத்து, ஹூலங்னுகே வனஜீவராசிகள் அலுவலகத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.