சட்டவிரோத வடிசாராயம் விற்போர் இந்த சமூகத்துடன் சேர்ந்து வாழ தகுதி அற்றவர்கள் ! - பிரதேச சபை தவிசாளர் கோபாலப்பிள்ளை

(வவுணதீவு நிருபர்)


சட்டவிரோத வடிசாராயம் எமது சமூகத்திற்கு வேண்டாத ஒன்று. இதனை விற்பனை செய்பவர்கள் எமது சமூகத்திற்கு விஷத்தை வழங்குவதற்கு நிகராக செயற்பட்டு வருகிறனர். என மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேச சபை தவிசாளர் தம்பிப்பிள்ளை கோபாலப்பிள்ளை தெரிவித்துள்ளார்.

மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேசத்தின் இன்று செவ்வாய்கிழமை (13) இடம் பெற்ற போதைப் பொருள் தடுப்பு விழிப்பூட்டலில் போது அவர் இக்கருத்தினை தெரிவித்தார்.

எமது பிரதேசத்தில் தொழில் எதுவும் இல்லை என்று எவரும் கூற முடியாது.
இப்பிரதேசத்தில் வடிசாராயம் விற்பனை செய்து வரும் ஒரு சிலரால் இங்குள்ள அனைவருக்கும் கெட்ட பெயர் ஏற்படுகின்றது.

பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தண்டம் பணம் செலுத்தினாலும் அவர்கள் மீண்டும் மீண்டும் அந்த தொழிலைத்தான் செய்கின்றார்கள். இவர்கள் இந்த வடிசாராயம் விற்பனை ஊடாக எமது சமூகத்திற்கு விஷத்தினை வழங்கி வருகிறனர். இதன் மூலம் எதிர்கால சந்ததியினை அழிக்கின்றனர்.

இந்த அரசாங்கம் சட்டவிரோத போதைப் பொருள் தடுப்பு விடயத்தில் சிறப்பாக செயற்பட்டு வருகிறது, அதே போல் இந்த போதைப் பொருள்களை விற்பனை செய்பவர்களுக்கு தண்டனைகள் அதிகரிக்கப்பட வேண்டும், அதற்கான புதிய சட்டங்களை கொண்டு வரப்பட வேண்டும்.

எமது பிரதேசத்தில் பொலிஸ் நிலையத்திற்கு அண்மையில் உள்ள சில கிராமங்களில் நீண்ட காலமாக ஒரு சிலர் இந்த சட்டவிரோத நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.

பல முறை மன்னிப்பு வழங்கியும் வடிசாராயம் எனும் பெயரில்
விஷம் கொடுத்து எமது சமூகத்தை அழிப்பவர்கள் இந்த சமூகத்துடன் இணைந்து வாழ தகுதி அற்றவர்கள் .

எனவே இங்குள்ள பொற்றோர்கள் விழிப்பாக இருக்க வேண்டும். எமது பிள்ளைகளை இந்த கொடியவர்களிடம் இருந்து பாதுகாக்க வேண்டும். அதே போல் இந்த சட்ட விரோத மதுபாவனையை இங்கிருந்து ஒழிக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும். என தெரிவித்தார்.