வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அவசர எச்சரிக்கை


மோல்டோவா நாட்டில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர் ஒருவரால் முன்னெடுக்கப்படும் பாரிய அளவிலான மனித வர்த்தகம் குறித்த தகவல்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு அறிக்கையிடப்பட்டுள்ளன.

சமூக ஊடகக் கணக்கின் ஊடாக காணொளிகளை வெளியிட்டு இந்த மோசடி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அவரிடம் பணத்தைக் கொடுத்து இந்த மோசடியில் சிக்கிய நபர்களிடமிருந்து தற்போது பணியகத்திற்கு முறைப்பாடுகள் கிடைப்பெற்று வருகின்றன.

அதற்கமைய, அவருக்கு எதிராக தற்போது பணியகத்தினால் அவசியமான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதுடன், மேலும் இந்த மோசடியில் சிக்கியவர்கள் இருப்பின் கூடிய விரைவில் பணியகத்திடம் முறைப்பாடு செய்யுமாறு பணியகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கின்றது.

1985 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகச் சட்டத்தின்படி, இலங்கைக்கு வெளியே வேலைவாய்ப்புகளுக்காக ஆட்களைச் சேர்த்தல், பிரச்சாரம் செய்தல், பணம் சேகரித்தல், தகவல்களைச் சேகரித்தல், கடவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளல் ஆகியவற்றுக்கு அனுமதிப்பத்திரம் பெறப்பட வேண்டும் என்பதுடன், அனுமதிப்பத்திரம் இன்றி இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவது கடுமையான தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும் பணியகம் குறிப்பிடுகின்றது.

இவ்வாறான மனித வர்த்தகர்களை அடக்குவதற்காக அமைச்சர் விஜித ஹேரத்தின் ஆலோசனையின் பேரில் விசேட பொலிஸ் பிரிவொன்றும் பணியகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன், அப்பிரிவிற்கு இவ்வாறான முறைப்பாடுகள் பெருமளவில் கிடைத்துள்ளன.

வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்கள் தமது தனிப்பட்ட சமூக ஊடகக் கணக்குகள் அல்லது புதிய சமூக ஊடகப் பக்கங்களைப் பயன்படுத்தி, வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்யும் போக்கொன்று தற்போது உருவாகியுள்ளதாகவும் பணியகம் அவதானித்துள்ளது.

எனவே, வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்வதற்காக, பணியகத்தின் அனுமதி பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களிடம் தவிர வேறு இடைத்தரகர்களிடம் பணம் அல்லது கடவுச்சீட்டுகளை வழங்குவதைத் தவிர்க்குமாறு பணியகம் வேலை தேடுபோவரிடம் மேலும் கோரிக்கை விடுக்கின்றது.