புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நாட்டிற்கு ஏற்படும் நட்டம்


புகையிலை மற்றும் மதுபானப் பயன்பாடு காரணமாக இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 22,000 பேர் உயிரிழப்பதுடன், இதன் விளைவாக நாட்டிற்கு வருடத்திற்கு 225 பில்லியன் முதல் 240 பில்லியன் ரூபாய் வரை நட்டம் ஏற்படுவதாக புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபை குறித்து, சுகாதார, ஊடக மற்றும் மகளிர் வலுவூட்டல் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவில் இடம்பெற்ற நிறுவன ரீதியான மீளாய்வின் போதே அதிகாரிகள் இந்தத் தகவல்களை வெளிப்படுத்தினர்.

இந்த நிலைமையிலிருந்து மீள்வதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகளை உள்ளடக்கி, புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபையின் சட்டத்தைத் திருத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர் நிஹால் அபேசிங்க தலைமையில் குறித்த குழு கடந்த 21ஆம் திகதி பாராளுமன்றில் கூடியது. இதன்போது முதலாவதாக புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபையின் செயற்பாடுகள் மீளாய்வு செய்யப்பட்டன.

உலகில் 104 நாடுகள் தனித்தனி சிகரெட்டுகளை விற்பனை செய்யத் தடை விதித்துள்ளதாகவும், அந்தச் சட்டத்தை இலங்கையிலும் நடைமுறைப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அதிகார சபை இதன்போது வலியுறுத்தியது.

தனித்தனியாக சிகரெட்டுகள் விற்பனை செய்யப்படும் போது, அதன் பொதிகளில் உள்ள எச்சரிக்கை விளம்பரங்கள் நுகர்வோருக்குத் தெரிவதில்லை என்பதையும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

மேலும், சிகரெட்டுகளுக்கான வரி விதிப்பானது, விலையைத் தீர்மானித்த பின்னரே மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தையும் அதிகாரிகள் இதன்போது வலியுறுத்தினர்.

இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபையின் சட்டத் திருத்தங்கள் மற்றும் ஏனைய வேலைத்திட்டங்களுக்குத் தேவையான முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.