ஹோட்டலின் மாடியிலிருந்து கீழே விழுந்து வெளிநாட்டு பெண் உயிரிழப்பு - பொலிஸார் விசாரணை!



நீர்கொழும்பு பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மாடியிலிருந்து கீழே விழுந்து வெளிநாட்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண் ஸ்வீடிஷ் நாட்டை சேர்ந்த 26 வயதுடையவர் ஆவார்.

இந்த வெளிநாட்டு பெண், நீர்கொழும்பில் உள்ள ஒரு ஹோட்டலின் ஒன்பதாவது மாடியில் உள்ள அறையில் தற்காலிகமாக தங்கியிருந்துள்ளார்.

வெளிநாட்டு பெண் திருமணமானவர் என்றும், அவரது கணவர் ஒரு தொழிலதிபர் என்றும் தெரியவந்துள்ளது.

மேலும் சம்பவ தினத்தின் போது, வெளிநாட்டு பெண்ணின் கணவர் தொழில் நிமித்தமாக குருணாகல் பகுதிக்கு சென்றிருந்ததாக தெரியவந்துள்ளது.

வெளிநாட்டு பெண் ஹோட்டலிருந்து கீழே விழுவதற்கு முன் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டிருந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விடயம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளுக்காக வெளிநாட்டு பெண் உரையாடலில் ஈடுபட்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் கையடக்க தொலைபேசியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

உயிரிழந்த வெளிநாட்டு பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு பெண்ணின் உடலில் பலத்த காயங்கள் இருப்பதாகவும், சம்பவத்தின் பிண்ணனியை கண்டறிய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.