
தேசிய மக்கள் சக்தி தனது ஆட்சியில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிட்டிருக்கிறது. ஆனால் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகத் தெரியவில்லை. எவ்வாறிருப்பினும் உத்தேச புதிய அரசியலமைப்பின் ஊடாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும். அரசியலமைப்பு விடயத்தில் அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டில் இருக்க கூடாது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
உத்தேச புதிய அரசியலமைப்பு குறித்து மீண்டும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகின்ற நிலையிலேயே எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இதனை வலியுறுத்தியுள்ளார். புதிய அரசியலமைப்பில் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான ஏற்பாடுகள் உள்வாங்கப்படும் பட்சத்தில் அதற்கு தாம் முழுமையாக ஆதரவளிப்பதாகவும் எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்த தனது நிலைப்பாட்டை மேலும் தெளிவுபடுத்தியுள்ள எதிர்க்கட்சி தலைவர்,
நாட்டுக்கு புதிய அரசியலமைப்பொன்று அவசியமாகும். அதனை செய்வதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு மக்களாணை காணப்படுகிறது. சிவில் சமூக அமைப்புக்களும் இதற்கான அழுத்தம் பிரயோகிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.
அதற்கு அவற்றிடமிருந்து ஐக்கிய மக்கள் சக்திக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் அதன் கொள்கைப் பிரகடனத்திலும் இதனை ஒரு பிரதான விடயமாக உள்ளடக்கியிருக்கிறது. எனவே அதில் குறிப்பிடப்பட்டுள்ளமைக்கமைய புதிய அரசியலமைப்பின் ஊடாக நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையையும் இல்லாதொழிக்க முடியும்.
இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பொறுப்புள்ள எதிர்க்கட்சி என்ற ரீதியில் நாம் தயாராகவே உள்ளோம். ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் இவ்விடயம் உள்ளடக்கப்பட்டிருக்கிறது.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணிக்கு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு மக்கள் ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்த அரசியலமைப்புத் திருத்தம் மக்களின் விருப்பு வெறுப்புகளுக்கு பொருந்திப் போக வேண்டும். இதன் கீழ், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும். இவ்விடயத்தில் அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டில் இருக்கக் கூடாது.
இதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் இதை முன்னின்று செய்ய வேண்டும். ஆனால் ஐக்கிய மக்கள் சக்தி இதற்குத் தயாராக இருந்தாலும், அரசாங்கம் இதற்குத் தயாராக இல்லை. நாட்டில் நிறைவேற்றதிகாரம், சட்டவாக்கத்துறை, நீதித்துறை மற்றும் ஊடகங்களின் சுயாதீனத்தன்மை பேணப்பட வேண்டும். இவற்றுக்கிடையிலான அதிகாரங்கள் சமநிலைப்படுத்தப்பட வேண்டும். உத்தேச புதிய அரசியலமைப்பின் ஊடாக அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்றார்.









.jpeg)


