தித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காணிகள் வழங்குவதில் அரசாங்கம் பாரபட்சம் காட்டுகின்றது. இது ஒரு வெளிப்படையான இன பாரபட்ச செயலாகும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கருத்து தெரிவித்தார்.
தித்வா புயலின் காரணமாக மலையக தமிழ் சமூகம் எதிர்கொண்ட சவால்கள் தொடர்பான கலந்துரையாடலொன்று கடந்த (22) ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலை மாற்றுக் கொள்கைகள் ஆய்வு மையம் ஒழுங்கு செய்திருந்தது.
தித்வா புயலால் மத்திய, ஊவா மற்றும் பிற பகுதிகளில் வாழும் மலையக தமிழ் சமூகங்கள் சந்தித்த பிரச்சினைகள் தொடர்பாக இங்கு கலந்துரையாடப்பட்டது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
மலையக தமிழ் மக்களுக்கு தித்வா நிவாரணங்கள் முழுமையாக வழங்கப்படவில்லை. வீட்டை சுத்தப்படுத்த 25,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டிருந்தாலும் 50 சதவீதமான மலையக மக்களுக்கு முழுமையாக அக் கொடுப்பனவு வழங்கப்படவில்லை.
மலையக பகுதிகளில் வாழும் மக்களில் வீதியோர காய்கறி வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ள வர்த்தகர்கள், முறையாக பதிவு செய்யாத காரணத்தால் அவர்களால் நிவாரணத்தை பெற்றுக் கொள்ள முடியவில்லை. கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டவர்களுக்கும் இன்னும் நிவாரணம் வழங்கப்படவில்லை. இவ்வாறு மலையக மக்களுக்கு முறையாக நிவாரணம் மற்றும் நஷ்ட ஈட்டை வழங்காமல் அரசாங்கம் அவர்களை புறக்கணித்துள்ளது.
தித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காணிகள் வழங்குவதில் அரசாங்கம் பாரபட்சம் காட்டுகின்றது. "ரீபில்டிங் ஸ்ரீ லங்கா" திட்டத்தின் மூலம் அனுராதபுரம், பொலநறுவையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காணிகள் வழங்கி வீடு கட்டுவதற்கு 50 இலட்சம் வழங்க முடியும் என்றால் அதனை ஏன் கண்டி, நுவரெலியா போன்ற மலையக பகுதி மக்களுக்கு வழங்க முடியாது. இது ஒரு வெளிப்படையான இன பாரபட்ச செயல் என்று புலப்படுகின்றது.
அரசாங்கம் மலையக மக்களுக்கு இருக்கும் நிவாரண பிரச்சினைக்கு விரைவில் ஒரு தீர்வை வழங்கி தாமதமின்றி காணிகளை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.










.jpeg)


