தங்க சங்கிலியை திருடிய சந்தேக நபருக்கு விளக்கமறியல் !


ஹட்டன் நகரின் பிரதான வீதியில் அமைந்துள்ள நகைக் கடையொன்றில் 289,000 ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியைத் திருடிக்கொண்டு தப்பிச் சென்ற சந்தேகநபர், இம்மாதம் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் சனிக்கிழமை (24) இரவு ஹட்டன் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை (25) ஹட்டன் நீதவான் எஸ். ராம்மூர்த்தி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

போகவந்தலாவ, கிவ் தோட்டத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 42 வயதான நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ​

நகை வாங்குபவர் போல் கடைக்குள் நுழைந்த சந்தேக நபர், பெண் ஊழியர்கள் காண்பித்த பல நகைகளைப் பார்வையிட்டுள்ளார்.

ஒரு சங்கிலியைப் பார்த்துக் கொண்டிருப்பது போல் பாசாங்கு செய்துவிட்டு, திடீரென அதனை எடுத்துக் கொண்டு கடையிலிருந்து தப்பியோடியுள்ளார்.

இத்திருட்டுச் சம்பவம் கடையிலிருந்த CCTV கெமராவில் பதிவாகியிருந்தது. அதன் அடிப்படையில் ஹட்டன் தலைமையக பொலிஸ் பரிசோதகர் டபிள்யூ.ஆர்.ஏ.டி. சுகததாசவிற்கு கிடைத்த தகவலின் பேரில்,பொகவந்தலாவ கிவ் தோட்டத்தில் உள்ள தனது மனைவியின் வீட்டில் மறைந்திருந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

விசாரணையின் போது, திருடிய சங்கிலியுடன் ஹட்டனில் இருந்து வட்டவளை வரை ரயில் பாதையில் நடந்து சென்று, நாவலப்பிட்டியிலுள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் அதனை 169,000 ரூபாவிற்கு அடகு வைத்ததாக சந்தேக நபர் ஒப்புக்கொண்டுள்ளார்.

அந்தப் பணத்தில் ஒரு பகுதியை கொழும்பில் கல்வி பயிலும் தனது பிள்ளைக்கு அனுப்பியுள்ளார்.

எஞ்சிய தொகையில் ஒரு பகுதியைத் தனது கடன்களை அடைக்கப் பயன்படுத்தியுள்ளார். அவரைக் கைது செய்யும் போது அவரிடம் 10,000 ரூபா மாத்திரமே இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.