சிவப்பு அறிவித்தல் இன்றி 14 சந்தேகநபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்: பொலிஸ் ஊடகப் பேச்சாளர்


சர்வதேச சிவப்பு அறிவித்தல் இன்றி, இதுவரை 14 சந்தேகநபர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான, பொடி லஸ்ஸி என்றழைக்கப்படும் அருமாஹந்தி ஜனித் மதுசங்க டி சில்வா நாட்டிற்கு அழைத்து வந்தமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

2024ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில், சர்வதேச சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்ட 29 சந்தேகநபர்களை நாட்டுக்கு அழைத்து வர முடிந்ததாக ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

தற்போதைய அரச பொறிமுறையின் ஊடாக 2024, 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்ட 29 சந்தேகநபர்களை நாட்டிற்கு அழைத்து வர முடிந்தது.

அதேபோல், சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவித்தல் இன்றி, இன்று வெள்ளிக்கிழமை (27) அழைத்து வரப்பட்ட சந்தேகநபருடன் சேர்த்து மொத்தம் 14 பேரை நாட்டுக்கு கொண்டுவர முடிந்துள்ளது.

சர்வதேச சிவப்பு அறிவித்தல் இல்லாத நிலையில், அந்தந்த நாடுகளின் குடிவரவு குடியகல்வு சட்டமீறல்கள் மற்றும் நாடுகடத்தல் தொடர்பில், பொலிஸ் மா அதிபரின் நேரடி தலையீடு மற்றும் ஏனைய நாடுகள் அவர் மீது வைத்துள்ள நம்பிக்கையின் அடிப்படையில் இந்த சந்தேகநபர்களை அழைத்து வர முடிந்தது.

அத்துடன், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்காக 89 சிவப்பு அறிவித்தல்கள் பெறப்பட்டுள்ளன. இந்த வருடம், குறித்த சந்தேகநபர்களை இலங்கைக்கு அழைத்து வர அதிகபட்ச முயற்சி எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.