ஜனாதிபதியின் அதிகாரத்திற்கு எதிரான மனுக்கள்; உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி !


ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு எதிராக தாக்கல்செய்யப்பட்டிருந்த

இரண்டு அடிப்படை உரிமைகள் மீறல் மனுக்களை உயர் நீதிமன்றம் நேற்று (26) தள்ளுபடி செய்தது.தித்வா சூறாவளியையடுத்து அவசரகால நிலைக்கான விதிகளை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி தீர்மானித்திருந்தார்.இதை எதிர்த்தே இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.மாற்றுக் கொள்கைகளுக்கான கேந்திர நிலையம் மற்றும் வழக்கறிஞர் ஆசாத் ஆதம்லெப்பே ஆகியோரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன, நீதிபதி குமுதினி விக்ரமசிங்க மற்றும் நீதிபதி அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய அமர்வின் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.சகல தரப்பினரதும் பத்திரங்களை பரிசீலித்த நீதிமன்றம் மனுக்களை நேரடியாக தள்ளுபடி செய்தது.சட்டமா அதிபர் சார்பாக ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஷானில் குலரத்ன, சூறாவளியால் ஏற்படக்கூடிய கடுமையான சூழ்நிலையை எதிர்பார்த்தே, அவசரகால நிலை பிறப்பிக்கப்பட்டதாக மன்றில் தெரிவித்தார். அவசரகாலச் சூழ்நிலைகளின் போது தீர்க்கமாகச் செயல்பட ஜனாதிபதிக்கு அரசியலமைப்பு அதிகாரம் இருப்பதாகவும் , தேசிய நலனுக்காக அத்தகைய அதிகாரங்களை முன்னெடுக்கப்படுவதை கட்டுப்படுத்தப்படக்கூடாது என்றும் அவர் வாதிட்டார்.

தித்வா சூறாவளியால் ஏற்பட்ட பாதகமான வானிலையைத் தொடர்ந்து அவசரகால விதிகளை அறிவிக்க ஜனாதிபதி எடுத்த நடவடிக்கையின் சட்ட பூர்வத்தன்மையை சவாலுக்குட்படுத்துமாறு இந்த மனுக்களில் கோரப்பட்டிருந்தன. இருப்பினும், உயர் நீதிமன்றம் இந்த மனுக்களை தள்ளுபடி செய்தது.