.jpeg)
விசேட தேவையுடையோருக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவை அரசாங்கம் மீளாய்வு செய்ய வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
இயலாமையுள்ள நபர்களை உள்ளடக்கிய சேவை வழங்கலை மேம்படுத்துவது தொடர்பான மாவட்ட மட்டக் கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இயலாமையுள்ள நபர்கள் தொடர்பாக பாராளுமன்ற ஒன்றியம் முன்னெடுத்து வரும் இந்த நிகழ்ச்சித் திட்டத்தை வரவேற்கின்றேன். நாடு முழுவதும், கிராமந்தோறும் உள்ள விசேட தேவையுடையோரின் பிரச்சினைகளை கேட்டறிந்து அவற்றை பாராளுமன்றத்துக்கு கொண்டு செல்லும் திறன் இவ்வொன்றியத்துக்கு உள்ளது. எனவே, எதிர்வரும் காலங்களில் நிறைவேற்றப்பட வேண்டிய சில விடயங்களை முன்வைக்க விரும்புகின்றேன் என்றார்.
விசேட தேவையுடையோருக்கான கொடுப்பனவு கடந்த காலத்தை விட தற்போது அதிகரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றது. இது வரவேற்கத்தக்கது. எனினும், இலங்கை இறக்குமதிகளை அதிகம் சார்ந்த நாடாக இருப்பதாலும், தற்போதைய பணவீக்கம் காரணமாக வழங்கப்படும் தொகை அவர்களுக்கு போதுமானதா என்பதை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 9,235 விசேட தேவையுடையோர் உள்ளதாகவும், அதில் 8,712 பேர் தற்போது கொடுப்பனவு பெறுகின்றனர் என்றும், மீதமுள்ளவர்களில் 152 பேருக்கு கொடுப்பனவு பெற தகுதி உள்ளதாக மாவட்ட சமூக சேவை திணைக்களத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
உதாரணமாக, மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் சுமார் 1,258 விசேட தேவையுடையோர் உள்ளதாக அறியப்படுகிறது. ஆனால், இங்கு 930 பேருக்கு மட்டுமே கொடுப்பனவு வழங்கப்படுகின்றது. மீதமுள்ளவர்கள் உண்மையில் தகுதியற்றவர்களா என்பதை மீளாய்வு செய்ய வேண்டும். இதுபோன்ற நிலைமை மாவட்டத்தின் பிற பிரதேசங்களிலும் இருக்கக்கூடும் என அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, அனைத்து விவரங்களையும் முழுமையாக மீளாய்வு செய்து, தகுதியுள்ள அனைவருக்கும் கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், தற்போது ரூபாய் 10,000 ஆக வழங்கப்படும் கொடுப்பனவை அதிகரிப்பதற்காக எதிர்வரும் வரவுசெலவுத்திட்டத்தில் முன்மொழிவு செய்து, அதற்கான அழுத்தத்தை சம்பந்தப்பட்ட தரப்புகள் வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, சிலர் கொடுப்பனவை பெறுவதற்காக அதிக கட்டணம் செலுத்தி முச்சக்கர வண்டிகளில் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. எனவே, இக்கொடுப்பனவை அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கும் வகையில் பிரதேச சபைகள் மற்றும் பிரதேச செயலகங்களுடன் இணைந்து செயற்படும் நடைமுறையை அறிமுகப்படுத்த பாராளுமன்ற ஒன்றியம் பரிந்துரை செய்ய வேண்டும் என்றும் அவர் கோரினார்.
இக்கலந்துரையாடலில் இயலாமையுள்ள நபர்கள் தொடர்பான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் சுகத் வசந்த டி சில்வா, பிரதித் தலைவர் ப. சத்தியலிங்கம், உறுப்பினர் இ. சிறிநாத், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள், அரச அதிகாரிகள் மற்றும் விசேட தேவையுடையோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)










