யானை அச்சுறுத்தலைத் தடுக்க போரதீவுப்பற்றுப் பிரதேச உப – தவிசாளர் அதிரடி நடவடிக்கை

(சித்தா)

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்றுப் பிரதேச சபைக்குட்பட்ட பாலையடிவட்டை வட்டாரக் கிராமங்களில் மக்கள் நடமாடமுடியாமலும், உயிர் மற்றும் சொத்துக்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்திலும் வாழ்ந்து வருகின்றனர். இந் நிலையினைக் கருத்தில் கொண்டு நிலவிவரும் காட்டு யானைகளின் அச்சுறுத்தலில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் நோக்கில் வீதி விளக்குகளைச் சீரமைக்கும் விசேட செயற்றிட்டம் 27.02.2026 (இன்று) முன்னெடுக்கப்பட்டது.

இதற்காக போரதீவுப்பற்று பிரதேச சபையின் உப – தவிசாளர் த.கயசீலன் தனது சொந்த நிதியனையினைக் கொண்டு தெரு விளக்குகளுக்கான புதிய மின்குமிழ்களைக் கொள்வனவு செய்து கிராம அபிவிருத்திச் சங்க நிர்வாகிகளிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டதுடன் போரதீவுப்பற்றுப் பிரதேச சபையின் தவிசாளர் வி.மதிமேனனின் முறையான அனுமதியுடன் சபையின் ஊழியர்களினால் இச் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

இதன் மூலம் பாலையடிவட்டை, நெல்லிக்காடு, 37 ஆம் கிராமம், 35 ஆம் கிராமம், விளாந்தோட்டம் போன்ற கிராம மக்கள் ஓரளவு நிம்மதி அடைந்ததுடன் போரதீவுப் பற்றுப் பிரதேச சபைத் தவிசாளர், உப – தவிசாளர் மற்றும் ஊழியர்கள் ஆகியோருக்கு மக்கள் நன்றியினைத் தெரிவித்தனர்.