பிளாஸ்டிக் போத்தல் மற்றும் பிளாஸ்டிக் உணவுப் பெட்டி பயன்பாட்டுக்கு விதிக்கப்பட்ட தடை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும். சிறுவர்களின் உடல்நிலை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என வர்த்தகத்துறை, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
வர்த்தகத்துறை அமைச்சின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
சர்வதேச நுகர்வோர் தினத்தை முன்னிட்டு (மார்ச் 15) பல்வேறு திட்டங்களை நுகர்வோர் அதிகாரசபை முன்னெடுத்துள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்களின் சுகாதார நலனை கருத்திற் கொண்டு கடைகளில் சொபின் பை விநியோகத்துக்கு மேலதிகமாக கட்டணம் அறவிடுமாறு வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அறிவித்தோம்.இதனால் தற்போது சொபின் பை பாவனை 50 சதவீதமளவில் குறைவடைந்துள்ளது
பாடசாலை மாணவர்கள் பிளாஸ்டிக் போத்தல் மற்றும் பிளாஸ்டிக் உணவுப் பெட்டி பயன்பாட்டுக்கு தடை விதிக்கும் வகையில் 2025.10.01 ஆம் திகதியன்று வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. பிளாஸ்டிக் பொருட்களால் சிறுவர்களின் உடலுக்கு ஏற்படும் தீங்கை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
பிளாஸ்டிக் போத்தல் மற்றும் பிளாஸ்டிக் உணவுப் பெட்டி உற்பத்திகளில் ஈடுபடுபவர்களுக்கு 06 மாத காலவகாசம் வழங்கப்பட்டது.இதற்கமைய இந்த வர்த்தமானி அறிவித்தலின் தீர்மானம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும். உற்பத்தியாளர்கள் மாற்றுத் திட்டங்களை செயற்படுத்த வேண்டும்.
சருமத்துக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் பல கிரீம்கள் சந்தைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய இரசாயனப் பதார்த்தங்கள் அடங்கிய சரும கிரீம் உற்பத்தி நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விரைவில் சருமம் வெள்ளையாகும் கிறீம்களை பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.


.jpg)








.webp)

