ஈரானின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரி அலி லாரிஜானி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது


இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது, இரவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஈரானின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரி அலி லாரிஜானி கொல்லப்பட்டுள்ளதாகவும் . மேலும், ஈரான் புரட்சிகர காவல்படையின் தன்னார்வ படையான “பசீஜ்” படையின் தலைவரான ஃகோலாம் ரெசா சுலைமானியும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.

இதேவேளை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) தனது வான்வெளியை செவ்வாய்க்கிழமை அதிகாலை தற்காலிகமாக மூடியது. ஈரானில் இருந்து ஏவுகணை மற்றும் ட்ரோன் அச்சுறுத்தல்களுக்கு பதிலளித்து வருவதாக அதன் இராணுவம் தெரிவித்தது. பின்னர் நிலைமை சீராகியதாக அதிகாரிகள் தெரிவித்ததால், வான்வெளி மீண்டும் திறக்கப்பட்டதாக அரசின் WAM செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

கல்ஃப் அரபு நாடுகள் மீது ஈரானிலிருந்து மீண்டும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. பிராந்திய எண்ணெய் கட்டமைப்புகளை குறிவைத்து தாக்கி வரும் ஈரான், முக்கியமான ஹோர்முஸ் நீரிணையில் தனது கட்டுப்பாட்டை விடமாட்டோம் என்று உறுதியளித்துள்ளது. இதேவேளை, இஸ்ரேல் ஈரான் மற்றும் லெபனானில் புதிய தாக்குதல்களையும் மேற்கொண்டுள்ளது.

திங்கட்கிழமை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், “பல நாடுகள்” ஹோர்முஸ் நீரிணையை பாதுகாக்க உதவ வருவதாக தெரிவித்தன என்று கூறினார். எனினும், சில நாடுகளின் தயக்கம், அமெரிக்காவுடன் உள்ள பாதுகாப்பு ஒப்பந்தங்களில் பரஸ்பர ஒத்துழைப்பு குறைவாக இருப்பதைக் காட்டுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். போர் குறித்த தங்களின் நோக்கங்கள் பற்றி தெளிவாக விளக்கவில்லை என்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை ஐரோப்பிய நாடுகள் விமர்சித்துள்ளன.