ஊடகங்கள் வாயிலாக வழங்கப்படும் தகவல்கள் மீதான நம்பிக்கை பலவீனமடைவது ஒரு சமூகத்திற்கு மிகவும் ஆபத்தானது என்றும், சமூக ஊடகங்களில் தகவல்களைப் பகிர்வதற்கு முன்னர் அவற்றின் உண்மைத்தன்மை குறித்து மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
இலங்கை பாடசாலை மாணவர்களிடையே ஒழுக்கநெறி, பொறுப்புணர்வு மற்றும் விமர்சன ரீதியான சிந்தனையை ஊக்குவித்து, தேசிய ஊடகக் கலந்துரையாடல்களில் அவர்களைச் செயற்திறனுடன் பங்கெடுக்கச் செய்யும் நோக்கில், கொழும்பு ஆனந்தக் கல்லூரியின் குலரத்ன மண்டபத்தில் மார்ச் 14ஆம் திகதி நடைபெற்ற "சந்தேஷய" ஊடக விருது வழங்கல் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
கொழும்பு ஆனந்தக் கல்லூரியின் ஊடகப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழாவில், ஊடகத்துறையில் நீண்டகாலம் பணியாற்றிய சிரேஷ்ட ஊடகவியலாளர்களுக்கு 'வாழ்நாள் சாதனையாளர் விருதுகளும்', பாடசாலை மட்டத்திலான திறமையாளர்களுக்கு ஊடக விருதுகளும் பிரதமரால் வழங்கி வைக்கப்பட்டன.
அங்கு மேலும் உரையாற்றிய பிரதமர்,
தகவல் தொழில்நுட்பமும் ஊடகத்துறையும் மிக வேகமாக மாற்றமடைந்து வரும் ஒரு காலகட்டத்திலேயே நாம் வாழ்கிறோம். இந்த மாற்றங்கள் எமக்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்கும் அதேவேளை, பல சவால்களையும் எமக்கு முன்னால் நிறுத்தியுள்ளன. தகவல் தொழில்நுட்பத்தாலும் ஊடகங்களாலும் மாற்றமடைந்த ஒரு உலகில் வாழ்வதற்கு எமது எதிர்கால சந்ததியினரை நாம் தயார்படுத்த வேண்டும்.
இன்று ஊடகத்துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் பார்க்கும்போது, ஊடகங்களும் தகவல்களும் ஜனநாயகப்படுத்தப்பட்டுள்ளன என்று கூறலாம். கடந்த காலங்களில், அறிவு மற்றும் தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் உரிமை ஒரு குறிப்பிட்ட சலுகை பெற்ற அல்லது அதிகாரம் கொண்ட குழுக்களிடமே இருந்தது. எத்தகைய தகவல்கள் பரிமாறப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் சக்தி ஒரு சிறிய குழுவிடமே காணப்பட்டது. ஆனால், இன்று தொழில்நுட்பப் புரட்சியின் விளைவாகத் தரவுகளும் அறிவும் நம் அனைவருக்கும் எட்டக்கூடிய ஒன்றாக மாறியுள்ளன. இது ஒரு வகையில் வரவேற்கத்தக்க விடயமாகும்.
இன்று நாம் வெறும் ஊடகப் பார்வையாளர்களோ அல்லது நுகர்வோரோ மட்டுமல்ல; பிரஜைகள் என்ற ரீதியில் இன்று ஒவ்வொருவரும் ஒரு ஊடகவியலாளராக மாற முடியும். தகவல்களைக் கையாளவும் பகிரவும் மக்களுக்கு இன்று பாரிய வாய்ப்புகள் உருவாகியிருப்பது ஒரு சிறந்த விடயமே என்ற போதிலும், அதில் ஒரு பாரிய ஆபத்தும் இருக்கவே செய்கின்றது. ஊடகவியலில் இருக்க வேண்டிய பொறுப்புக்கூறல் மற்றும் நம்பகத்தன்மை தொடர்பில் இன்று பெரும் பிரச்சினைகளையும் பாரிய சவால்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
உண்மை எதுவென்று கண்டறிய முடியாத அளவிற்குத் தகவல்கள் இன்று எம்மை நோக்கி வேகமாக வந்துகொண்டிருக்கின்றன. இதனால் சில நேரங்களில் முடிவுகளை எடுப்பது மிகவும் கடினமாகிறது. எமது நாட்டில் மாத்திரமன்றி, உலகளாவிய ரீதியில் பார்க்கும்போது, தவறான அல்லது திட்டமிட்டுச் சிதைக்கப்பட்ட தகவல்களினால் சமூக மோதல்கள் ஏற்பட்ட சந்தர்ப்பங்களை நாம் பார்த்திருக்கிறோம்; மனித உயிர்கள் காவுகொள்ளப்பட்ட நிகழ்வுகளையும் கண்டிருக்கிறோம்.
எமது அறியாமையிலேயே சில சமயங்களில் நாம் இணையத்தளங்களின் மாய வலைக்குள் சிக்கிக்கொள்கிறோம். எமக்குத் தேவையானவை, தேவையற்றவை என அனைத்தையும் சமூக ஊடகங்களில் பகிர்கிறோம். ஆனால், இதன் மூலம் எமது தனிப்பட்ட தகவல்கள் இணையத்தில் சேகரிக்கப்படுவதை நாம் மறந்துவிடுகிறோம். ஒரு தவறான விடயம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுவிட்டால், அதனை மக்களின் நினைவிலிருந்து அகற்றுவது மிகக் கடினம்.
அத்தோடு, தவறான தகவல்களைப் பரப்புவதன் மூலம் ஊடகங்கள் மீதான நம்பிக்கை பலவீனமடைவது ஒரு சமூகத்திற்கு மிகவும் ஆபத்தானது. சமூகத்தின் இருப்புக்கும் பிரஜைகளுக்கு இடையிலான நல்லுறவுக்கும் மக்களின் வாழ்க்கையில் செல்வாக்கு செலுத்தும் நிறுவனங்கள் மீதான நம்பகத்தன்மையைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானதாகும். அதன் மூலமே ஒரு சமூகத்தின் ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு மற்றும் இருப்பை உறுதி செய்ய முடியும்.
ஆயினும், தவறான தகவல்கள் பரப்பப்படுவதால் இன்று என்ன நேர்ந்துள்ளது? எமது தலைவர்கள் மீது எமக்கு நம்பிக்கை இல்லை, பெரியவர்களை நாம் நம்புவதில்லை. எமக்குக் கிடைக்கும் ஒரு செய்தியை எவ்வாறு நம்புவது என்ற சந்தேகம் எமக்குள் ஏற்படுகின்றது. இவ்வாறு ஒரு சமூகத்தில் நம்பகத்தன்மை சீர்குலையும்போது, அச்சமூகம் பாரிய நெருக்கடிக்கு உள்ளாகும்.
எனவே, தலைமைத்துவத்தின் மீதான நம்பிக்கையை வளர்க்கும் கலாசாரத்தை உருவாக்குவது, நம்பகமான தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் முறைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது போன்றவை சமூகத்தின் இருப்புக்கு இன்றியமையாதவை. ஆகவே, ஊடகத்துறைக்குள் பிரவேசிக்கும் உங்களுக்குப் பாரிய பொறுப்பு உள்ளது.
இன்று நாம் கௌரவித்த இந்தச் சிரேஷ்ட ஊடகவியலாளர்களைப் போலவே ஒருநாள் நீங்களும் இத்துறைக்கு வருவீர்கள். ஆனால், அவர்கள் பணியாற்றிய காலத்திற்கும் நீங்கள் பணியாற்றும் காலத்திற்கும் இடையே பாரிய வித்தியாசம் ஏற்பட்டுள்ளது. ஊடகத்துறையின் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கவும் நீங்கள் வழங்கும் தகவல்களுக்காகக் குரல் கொடுக்கவும் வேண்டிய விசேட பொறுப்பு உங்களுக்கு உள்ளது. நீங்கள் வழங்கும் தகவல் உண்மையா, அது யாரைப் பாதிக்கும் என்பன குறித்து நீங்கள் சிந்திக்க வேண்டும்.
அதேவேளை, ஊடகங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு கிடைக்கும் தகவல்களின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தும் பொறுப்பு உள்ளது. இதனாலேயே டிஜிட்டல் எழுத்தறிவு மற்றும் ஊடக எழுத்தறிவு என்பவற்றை நாம் கட்டாயத் தேவையாகக் கருதுகிறோம். அதனாலேயே எமது கல்விச் சீர்திருத்தங்களில் இத்தகைய பாடங்களையும் கருத்துருக்களையும் உள்வாங்க வேண்டும் என நாம் எண்ணுகிறோம்.
இணையத்தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் உள்ள தகவல்களைப் பிறருக்குப் பகிரும் முன்னர், அவற்றின் உண்மைத்தன்மையைக் கண்டறியும் பொறுப்பு ஒவ்வொரு பிரஜைக்கும் உள்ளது, எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மேலும் தெரிவித்தார்.


.webp)









.jpeg)
.webp)