உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான விசாரணைகள் எவ்வித அரசியல் பாகுபாடுமின்றி முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், தவறு செய்யாத எவரும் இது குறித்து அச்சமடையத் தேவையில்லை என்றும் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி கைது செய்யப்பட்டமை அரசியல் வட்டாரங்களில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், விசாரணைகளை குழப்ப நினைப்பவர்களுக்கு மத்தியில் அரசாங்கம் சட்டத்தை முறையாக அமுல்படுத்தி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
12ஆம் திகதி வியாழக்கிழமை மொனராகலை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி கைது செய்யப்பட்டமை பெரும்பாலான அரசியல்வாதிகள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அதற்கான காரணம் என்ன என எமக்குத் தெரியாது. நாம் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்த விசாரணைகளையே முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றோம். இந்த விசாரணைகளுக்கு ஒத்துழைப்புக்களை வழங்குவதை விடுத்து, வெளியில் அவற்றை குழப்பும் வகையில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
தம்மீது எவ்வித தவறும் இல்லை என்றால், எவரும் பதற்றமடையத் தேவையில்லை. இந்த விசாரணைகளை முடிந்தளவு துரிதமாக நிறைவு செய்வதற்கு அரசாங்கமும் நீதி அமைச்சும் தீர்மானித்திருக்கிறது. எனவே தான் தினந்தோரும் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. மறுபுறம் வங்குரோத்தடைந்த எதிர்க்கட்சிகள் கூச்சலிட்டுக் கொண்டிருக்கின்றன.
நாம் எவ்வித பாகுபாடும் இன்றி கட்சி பேதமின்றி அரசியலமைப்பின் 12 (01) உறுப்புரையை சரியாகப் பயன்படுத்தும் முறையான அரசாங்கமாக செயற்படுகின்றோம். இது ஜனாதிபதி தலைமைத்துவம் வகிக்கும் தேசிய மட்டத்திலான வேலைத்திட்டமாகும். இந்நாட்களில் எமது கடற்பரப்பை அண்மித்த பகுதிகளில் பாரியளவிலான பெருந்தொகை போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவை தொடர்பான சட்ட நடவடிக்கைகள் எவ்வித தடையும் இன்றி முன்னெடுக்கப்படும்.
அந்த வகையில் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டால், விசாரணைகள் நிறைவடையும் வரை பிணை கிடையாது என்றவாறு சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்படவுள்ளன. கைப்பற்றப்படும் போதைப்பொருட்கள் முறையாக அழிக்கப்படுவதில்லை என்றும், எனவே அவை சமூக மயப்படுத்தப்படுவதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றனர். இது தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடப்பட்டு, அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்ட நீதி அமைச்சின் உறுப்பினர்களை உள்ளடக்கிய குழுவின் ஊடாக ஆராயப்பட்டு வருகிறது.
அதற்கமைய மாதிரிக்காக மாத்திரம் சிறிய தொகையை வைத்துக் கொண்டு எஞ்சியவற்றை உடனடியாக அழிப்பதற்கான நடவடிக்கை குறித்து அந்த குழு அவதானம் செலுத்தி வருகின்றது. அதேபோன்று ஆழ் கடலில் கைப்பற்றப்படும் போதைப்பொருட்கள் குறித்து வழக்கு தொடர முடியுமா என்ற பிரச்சினையும் காணப்பட்டது. எனவே தான் அது குறித்த சட்டத்திலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, ஆழ் கடலில் கைப்பற்றப்படும் போதைப்பொருட்கள் குறித்தும் வழக்கு தொடுத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.











.jpeg)

.jpg)