சட்டவிரோதமாக கொள்வனவு செய்யப்பட்ட வாகனங்களை பதிவு செய்த மோட்டார் வாகன திணைக்கள அதிகாரிகள் நால்வருக்கு விளக்கமறியலில்


சுங்க வரி செலுத்தப்படாத வாகனங்களை சட்டவிரோதமான முறையில் பதிவு செய்தமை உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டுகளுக்கமைய இலஞ்ச ஊழல் விசாரணைப்பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தில் தற்போது கடமையாற்றிவரும் மற்றும் ஏற்கனவே கடமையாற்றிய அதிகாரிகள் நால்வரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் வியாழக்கிழமை (12) உத்தரவிட்டது.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட விசேட விசாரணைகளைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட இந்த சந்தேக நபர்களை கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே அவர்களை விளக்கமறியலில் வைப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களில் முன்னாள் பிரதி ஆணையாளர் ஒருவர், முன்னாள் உதவிப் பணிப்பாளர் ஒருவர், முன்னாள் திணைக்கள எழுத்தர் மற்றும் புலனாய்வு அபிவிருத்தி உதவியாளர் ஒருவருமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சுங்க வரி செலுத்தப்படாமல் சட்டவிரேதமான முறையில் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட4 சொகுசு வாகனங்களை, மோட்டர் வாகனப் போக்குவரத்து திணைக்களத்தின் சட்ட விதிமுறைகளை மீறிப் பதிவு செய்துள்ளதாக சந்தேகநபர்கள் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

மேலும் குறித்த வாகனங்கள் தொடர்பான போலித் தரவுகளை திணைக்களத்தின் கணினி முறைமையில் திட்டமிட்டு உள்ளீடு செய்துள்ளமையும், சட்டவிரோதப் பரிமாற்றங்கள் ஊடாக அவற்றை பதிவு செய்துள்ளமையும் தெரியவந்துள்ளது. அத்துடன், வாகனமொன்றின் நிறத்தை மாற்றுவது தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் போலியானவை எனத் தெரிந்திருந்தும் அவற்றை ஏற்றுக்கொண்டு அனுமதி வழங்கியமை மற்றும் வாகனத்தின் எடை தொடர்பான முறையான உறுதிப்படுத்தல் ஆவனங்கள் இன்றி உரிமையாளர் மாற்றத்திற்கு அனுமதி வழங்கியமை போன்ற மோசடிகளிலும் சந்தேகநபர்கள் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டதரணிகள், அவர்களை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தனர். இதன்போது நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட சமர்பனங்களை பரீசீலனை செய்த நீதிவான், சந்தேகநபர்களின் பிணைக் கோரிக்கையை நிராகரித்ததுடன். மேலதிக விசாரணைகளை அவர்களை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.