கியூஆர் முறைமையை சரிசெய்ய அரசுக்குத் தெரியாது விட்டால் காஞ்சனவிடம் ஆலோசனை பெறுங்கள் - சாமர சம்பத்!


கடந்த காலத்தில் இந்தியாவுக்கு நாம் உதவி செய்தோம். இந்தியா இப்போது எமக்கு எரிபொருள் வழங்க வேண்டும். ஆனால் இந்தியா இப்போது எம்மை எப்படி நடத்துகிறது என்று பாருங்கள். கியூஆர் முறைமையை சரிசெய்ய அரசுக்குத் தெரியாது விட்டால் முன்னாள் அமைச்சர் காஞ்சனவிடம் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும் என புதிய ஜனநாயகமுன்னணி எம்.பி. சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) இடம் பெற்ற ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் இலஞ்சம் அல்லது ஊழல் சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அலுவலர்களுக்கும் ஊழியர்களுக்குமான ஊதியம் மற்றும் சேவை நிபந்தனைகளை தீர்மானித்தல் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

தற்போது கியூஆர் முறையில் பெரிய சிக்கல் உள்ளது. புதிய வாகனங்களுக்கு இன்னும் கியூஆர் பதிவு செய்ய முடியாதுள்ளது. விற்கப்பட்ட வாகனங்களையும் பதிவு செய்ய முடியாதுள்ளது.

தொலைபேசி இலக்கம் அற்றவர்களுக்கு கியூஆர் பதிவு செய்யமுடியவில்லை. எனவே, பழைய கியூஆர் தரவுத்தளத்தை அழித்துவிட்டு, புதிய தரவுத்தளத்தை உருவாக்கினால் அனைவரும் மீண்டும் வழக்கம் போல் கியூஆர் ஐ பெற்று எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

உங்களுக்கு இதை செய்ய முடியாவிட்டால், முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகரவை அழைத்து வரச் சொல்லுங்கள், அவர் சம்பளம் பெறாமல் இதைச் செய்து கொடுப்பார் என்றார்.