கல்முனையில் தேயிலைப் பைகளில் ஹெரோயின் கடத்தல் - சந்தேகநபர் கைது




தேயிலைப் பைகளில் மறைத்து ஹெரோயின் போதைப்பொருளைக் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை, 72 மணித்தியாலங்கள் (3 நாட்கள்) தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவ் வழக்கு திங்கட்கிழமை (16) கல்முனை நீதிமன்ற நீதிவான் கே.எல்.எம்.சாஜித் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, எதிர்வரும் 19 ஆம் திகதி வரை சந்தேக நபரைத் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்யுமாறு உத்தரவிடப்பட்டது.

அம்பாறை மாவட்டம், கல்முனை தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் பெருந்தொகை ஹெரோயினைத் தேயிலைப் பைகளில் மறைத்து வைத்து நீண்டகாலமாக கடத்தி வருவதாக அம்பாறை மாவட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு (D.C.D.B) இரகசியத் தகவல் கிடைத்தது.

அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் விசேட குழுவினர் மேற்கொண்ட அதிரடிச் சோதனையின் போது, 48 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். இதன்போது அவரிடமிருந்து விற்பனைக்காகத் தயார் நிலையில் தேயிலைப் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெரோயின் பாக்கெட்டுகள் மீட்கப்பட்டன.

கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தர மற்றும் அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல ஆகியோரின் ஆலோசனையின் கீழ், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டாரவின் வழிநடத்தலில் இந்தப் பொலிஸ் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களுடன் அவர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கல்முனை தலைமையகப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.