சிவனொளிபாத மலைக்குச் சென்று திரும்பிய கார் பள்ளத்தில் வீழ்ந்து விபத்து: சாரதி போதைப்பொருள் பயன்படுத்தியமை உறுதி!


சிவனொளிபாத மலை யாத்திரை சென்றுவிட்டு நுவரெலியா நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த கார் ஒன்று, கடந்த 13ஆம் திகதி வீதியை விட்டு விலகி சுமார் 15 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தின் போது காரைச் செலுத்திய சாரதி போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை வைத்தியப் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

சம்பவத்தையடுத்து டிக்கோயா ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சாரதிக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த சாரதி, ஒரு பெண் உள்ளிட்ட மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், தற்போது சாரதி மாத்திரம் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

சாரதி வைத்தியசாலையிலிருந்து வெளியேறியதும், போதைப்பொருள் பயன்படுத்தி வாகனத்தைச் செலுத்தியமை மற்றும் கவனக்குறைவாக வாகனத்தைச் செலுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டு, ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.

கடந்த 13ஆம் திகதி மாலை 4:30 மணியளவில் ஹட்டன் - மஸ்கெலியா சிவனொளிபாத மலை வீதியின் நோர்வூட், ரோக்வூட் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்தது. சிவனொளிபாதமலை யாத்திரை முடிந்து திரும்பும் போது சாரதிக்குத் தூக்கம் ஏற்பட்டதால், கார் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி ரோக்வூட் தோட்டத்திற்குச் செல்லும் பாதையில் தலைகீழாகப் புரண்டு விபத்துக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.