
QR முறையன்றி எரிபொருளை விநியோகிக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், அவர்களின் அனுமதிப்பத்திரத்தை ரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.
அவ்வாறான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் குறித்து பொதுமக்கள் தொடர்ந்து பொலிஸாருக்கோ அல்லது எரிபொருள் கூட்டுத்தாபனத்திற்கோ தகவல் வழங்குமாறு தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, கச்சா எண்ணெய் கப்பல் ஒன்றை உறுதிப்படுத்தும் வரை நாட்டுக்கு எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் ஒருவித அபாயம் காணப்படுவதாகவும் டி.ஜே. ராஜகருணா மேலும் தெரிவித்தார்.
'அத தெரண BIG FOCUS' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இந்த நிலையை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், அதன்படி QR குறியீட்டைப் பயன்படுத்துவது கட்டாயமாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.
"மக்கள் எவராவது கடத்தலில் ஈடுபடுகிறார்கள் என்றால், அவர்கள் உங்களது உரிமையையே இல்லாது செய்கிறார்கள். எனவே உடனடியாக அதற்கு எதிராகச் செயல்படுங்கள். எங்காவது எரிபொருள் சேமித்து வைக்கப்பட்டிருந்தால் அது முற்றிலும் சட்டவிரோதமானது. அது குறித்து தகவல் வழங்குங்கள். இன்று முதல் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இனி QR முறைக்கு மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படும். நேற்று தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக சில விலக்குகள் இருந்தன. தற்போது அந்தப் பிரச்சினைகள் அனைத்தும் சரிசெய்யப்பட்டுள்ளன.
QR முறைக்கு வெளியே எங்காவது எரிபொருள் அடிக்கப்பட்டால், அது குறித்து உடனடியாக எரிபொருள் கூட்டுத்தாபனத்திற்கும் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கும் அறிவிக்கவும். நாம் அதில் முழுமையாக தலையிடுவோம். எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கும் நாம் அறிவித்தல் விடுத்துள்ளோம். கையிருப்பில் உள்ள மற்றும் விநியோகிக்கப்பட்ட எரிபொருள் அளவுகளுக்கிடையே வித்தியாசம் காணப்பட்டால், கண்டிப்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அது அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்வது வரை செல்லும். அவ்வாறு செய்யாமல் மக்களுக்கு நீதியை நிலைநாட்ட முடியாது" என அவர் தெரிவித்தார்.










.webp)

